மாணவர்களின் திறன் மேம்பாடே வேலைவாய்ப்புகளைத் தீர்மானிக்கும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் எம்.கே. சூரப்பா

போட்டிகள் மிகுந்த இன்றைய சூழலில் திறன் மேம்பாடு மட்டுமே வேலைவாய்ப்புகளைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக உள்ளன. ஆகவே, பொறியியல் உள்பட அனைத்து உயர்கல்வி மாணவர்களும் தங்களின்


போட்டிகள் மிகுந்த இன்றைய சூழலில் திறன் மேம்பாடு மட்டுமே வேலைவாய்ப்புகளைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக உள்ளன. ஆகவே, பொறியியல் உள்பட அனைத்து உயர்கல்வி மாணவர்களும் தங்களின் துறைசார் புதுமைகளை அறிந்துகொண்டே இருக்க வேண்டியது அவசியம் என்றார், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே. சூரப்பா.
திருநெல்வேலி, வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 14ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
பொறியியல் படிப்புகளுக்கான எல்லைகள் மாறிக்கொண்டே வருகின்றன. பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பின்மையால் இளம் தலைமுறையினர் மிகுந்த விரக்தியடைந்து வருகின்றனர். வேலைவாய்ப்புகளைத் தீர்மானிக்கும் காரணியாக திறன் மேம்பாடு உள்ளது. உயர் கல்வி முடித்தோம், சான்றிதழ் பெற்றோம் என்று நிறுத்திக்கொள்ளாமல், மத்திய-மாநில அரசுகள், தனியார் அமைப்புகளின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசு, தனியார் துறை வேலைகளை மட்டுமே நம்பியிருக்காமல் தொழில்முனைவோராக மாற முயல வேண்டும். மத்திய-மாநில அரசுகளின் கடனுதவித் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தொழில்முனைவோராக எளிதாக மாறிவிட முடியாது. அதற்கு பல்வேறு சவால்களைக் கடந்துவர வேண்டும். விடாமுயற்சி, அர்ப்பணிப்பு உணர்வுகள் மட்டுமன்றி புதுமைகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மிகவும் அவசியம். ஏனெனில், தகவல்தொடர்பியல் துறையின் வளர்ச்சியால் மின்னணுமயமாகிவரும் சூழலில் அதற்கேற்ப நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்வில் பொறியியல் துறையின் பங்களிப்பு இல்லாத துறைகளோ, சாதனங்களோ இருக்க முடியாது.
பருவநிலை மாற்றம், சுகாதார சிக்கல்களால் புதிய புதிய கிருமிகள், நோய்களால் மக்கள் அவதிப்படுவதோடு, பேரிடர்களைச் சந்தித்து உடைமைகளை இழக்கும் நிலை காணப்படுகிறது. இதிலிருந்து மக்களையும், நாட்டையும் காக்க புதிய தொழில்நுட்ப யுக்திகளை இளம் தலைமுறையினர் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.
வீட்டுக் குப்பைகள் முதல் மின்னணுக் குப்பைகள் வரை நகரமயமாக்கலில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்பங்களின் தேவைகள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. அதைப் புரிந்துகொண்டு மாணவர்கள் கடுமையாக உழைக்கத் தொடங்க வேண்டும். வளர்ச்சி என்பது தொடக்கப் புள்ளிதான் முடிவல்ல என்பதை உணர வேண்டும் என்றார் அவர்.
பட்டமளிப்பு விழாவுக்கு ஸ்காட் குழுமங்களின் தலைவர் எஸ். கிளிட்டஸ் பாபு, துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் தலைமை வகித்தனர்.
743 மாணவர்-மாணவிகளுக்கு பட்டங்களும், 27 பேருக்கு அண்ணா பல்கலைக்கழக தரவரிசை சான்றிதழ்களும், ஒரு மாணவிக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. ஸ்காட் குழுமங்களின் செயல் இயக்குநர் மெனான்டஸ், பொதுமேலாளர்கள் (நிதி) இக்னேஷியஸ் சேவியர், (வளர்ச்சி) ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கல்லூரி முதல்வர் டி.சி. ஜாய் வின்னி ஒய்ஸ் வரவேற்றார். பேராசிரியர் வேதபிரிய வதனா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com