சக மனிதர்கள் மீது அக்கறையில்லாதவர்கள் படைப்பாளியாக இருக்க முடியாது: எழுத்தாளர் வண்ணதாசன்

சக மனிதர்கள் மீது அக்கறையில்லாதவர்கள் படைப்பாளியாக இருக்க முடியாது என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் கூறினார்.

சக மனிதர்கள் மீது அக்கறையில்லாதவர்கள் படைப்பாளியாக இருக்க முடியாது என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் கூறினார்.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்  சீதக்காதி தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா மற்றும் "மின்னோவியம்' குறும்படத் தயாரிப்பு மன்றத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தாளாளர் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி தலைமையேற்று, தமிழ்த் துறை உருவாக்கியுள்ள "இன்பத் தமிழ்' என்ற நூலை வெளியிட்டு பேசினார். கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கே.ஏ. மீரான் முகைதீன், எம்.கே.எம். முஹம்மது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசைன்,  கல்லூரியின் அரசு உதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் ஏ. அப்துல் காதர், கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் அ.ச. ராமையா, வழக்குரைஞர் எம்.எம். தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் வாழ்த்திப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மின்னோவியம் எனும் குறும்படத் தயாரிப்பு மன்றத்தை எழுத்தாளர் வண்ணதாசன் தொடங்கி வைத்தார். "நானும் என் கவிதைகளும்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
இங்கே இளைய மாணவ கவிஞர்களுக்கிடையில் என் கவிதைகளைப் பகிர்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பேனா என்னும் ஆறாவது விரலோடு ஐம்பத்தாறு ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வருகிறேன். நான் எழுதிய பதினைந்து கவிதைத் தொகுதிகளில் என் வாழ்வையே முன்வைத்திருக்கிறேன். கருப்பு வளையல் கவிதைக்குப் பின்னால் ஆயிரம் கவிதைகளை நான் எழுதி இருக்கிறேன். ஆனால் அவற்றைச் சொல்கிறவர்கள் அக்கவிதையையே மேற்கோள் காட்டுகிறார்கள்.
என் கவிதை வரி உண்மையானது, பாசாங்கற்றது. மத்தியான வெயிலில் அமர்ந்திருக்கும் மீன்கொத்தி போன்றது. என் கவிதையின் மொழி எளியது. அது பறவையின் மொழியல்ல, பறவை உதிர்த்த சிறகின் மொழி. அது வனத்தின் மொழியல்ல, வீட்டுத் தாவரத்தின் மொழி. 
அது சர்வதேச மொழியல்ல, என் தெருவின் மொழி. அந்தத் தெருவிலிருந்துதான் எனது கவிதைகள் தோன்றியுள்ளன. என் மொழி எளிய மனிதர்களின் உண்மையான மொழி.
ஒரு கவிதையை ஒரு கவிஞன் தன் குரலில் தரும்போது வாசகனை அவன் கட்டித் தழுவிக் கொள்கிறான்.
ஒரு யானையை ரசித்துக்கொண்டே மண்புழுவையும் தேடுபவன்தான் கவிஞனாக இருக்கமுடியும். சக மனிதர்கள் மீதான அக்கறையில்லாதவர்கள் படைப்பாளியாக, ஏன் மனிதனாகக் கூட இருக்க முடியாது. "மின்னோவியம்' என்ற குறும்படங்களின் அமைப்பு மூலமாக மனிதத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் மாணவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். மனிதத்தைப் பேசுவது தான் படைப்பாளிகளின் வேலை என்றார்.
அதைத் தொடர்ந்து சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்களின் தயாரிப்பான "வண்ணம்' எனும் குறும்படம் திரையிடப்பட்டது. தமிழ்த் துறைத் தலைவர் ச. மகாதேவன் வரவேற்றார். மாணவர் பேரவை துணைத் தலைவர் ஆர். மரியம் பாத்திமாள் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com