அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்: கே. பாலபாரதி

மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்கு விவசாயிகள், பொதுமக்கள் தக்க பாடம் கற்பிக்க

மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்கு விவசாயிகள், பொதுமக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கே. பாலபாரதி.
திருமங்கலம்- செங்கோட்டை வரையிலான நான்குவழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது: நிலம் கையகப்படுத்துவதற்கென ஒரு மரபு உள்ளது. முதலில், விவசாயிகளுக்கு அறிவிப்பு தர வேண்டும்; பின்னர், கருத்துக் கேட்கவேண்டும்; அதை மினிட் புத்தகத்தில் பதிந்து, சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கையெழுத்துப் பெறவேண்டும்; அதன்பேரில், ஆட்சியர் முடிவெடுக்கவேண்டும். 
ஆனால், இதில் ஒன்றுகூட திருமங்கலம்- செங்கோட்டை நான்குவழிச் சாலைக்கு நிலம் எடுத்தபோது பின்பற்றப்படவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பிரதமர் மோடி, இப்போது ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். உரம் விலை உயர்வு, விளைநிலத்தில் மின்கோபுரம், மேக்கேதாட்டு பிரச்னை,  8 மற்றும் 4  வழிச் சாலைப் பிரச்னைகளால் தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். 
அவர்களின் நலனுக்கெதிரான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்கின்றன. அதன்விளைவுதான் அண்மையில் 5 மாநிலத் தேர்தலில் பாஜக கடும் தோல்வியைச் சந்தித்தது.
எட்டுவழி, நான்குவழிச் சாலையால் பன்னாட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதாயம் கிடைக்குமே தவிர சாமானியனுக்கு அல்ல. நேற்றுவரை இதுபோன்ற திட்டம், ஜி.எஸ்.டி ஆகியவற்றுக்கு எதிராக அறிக்கைவிட்ட பாமக, இப்போது அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்திருப்பது சந்தர்ப்பவாத அரசியல். 
மக்கள் நலனுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு விவசாயிகளும் மக்களும் தகுந்த பாடம் புகட்டவேண்டும் என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டச் செயலர் உ. முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட துணைச் செயலர் கோ. மாடசாமி, சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பி. நடராஜன், விவசாயிகள் சங்க துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். மீராக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மதிமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலைக்குமார், மார்க்சிஸ்ட்  மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன், மதிமுக மாவட்டச் செயலர் தி.மு. ராஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் ஜாபர்அலி உஸ்மானி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பா. ராஜகுரு, நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறைச் செயலர் இசை. மதிவாணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி நயினார் முகமது, டிஒய்எஃப்ஐ மாவட்டச் செயலர் பி. உச்சிமாகாளி, திமுக ஒன்றியச் செயலர் பொன். முத்தையாபாண்டியன் மற்றும் சிவகிரி, கடையநல்லூர், செங்கோட்டை வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com