வாழ்க்கையில் லட்சியத்தை எட்ட நேர்மறை சிந்தனை அவசியம்: சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பேச்சு

வாழ்க்கையில் லட்சியத்தை எட்ட நமக்கு நேர்மறையான சிந்தனை அவசியம் என திருநெல்வேலி மனோன்மணீயம்


வாழ்க்கையில் லட்சியத்தை எட்ட நமக்கு நேர்மறையான சிந்தனை அவசியம் என திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி.பாஸ்கர் கூறினார்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சுந்தரனார் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி. பாஸ்கர் தலைமை வகித்து 141 பேருக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே தொலைநெறி தொடர்கல்வி இயக்கக மாணவர்களுக்காக நடைபெறும் முதல் பட்டமளிப்பு விழா இதுதான். இந்த நேரத்தில் நீங்கள் பட்டம் பெற உதவியாக இருந்த உங்கள் குடும்பத்தினர், உறவினர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது பட்டம் பெறும் உங்களில் சிலர் ஏதாவது ஒரு பட்டம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும், சிலர் கூடுதல் கல்வித் தகுதிக்காகவும், சிலர் வேலைவாய்ப்பை பெறும் நோக்கிலும் படித்திருப்பீர்கள். நீங்கள் பெற்ற இந்த பட்டத்தை நடைமுறை வாழ்க்கையில் தேவைக்கேற்றவாறு பயன்படுத்தாவிட்டால் அது அர்த்தமற்றதாகிவிடும். இன்றைய காலக்கட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதனால் காலத்துக்கேற்றவாறு உங்கள் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்: இப்போது பட்டம் பெற்றிருக்கும் அனைவரும் இதோடு படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். தொடர்ந்து படியுங்கள். அது உங்கள் வளர்ச்சிக்கு உதவும். நீங்கள் வளர்ச்சியடைந்தால்தான் நாடு வளர்ச்சியடையும். பட்டம் பெற்றுள்ள நீங்கள் அனைவரும் வேலைக்கு செல்வதோடு மட்டுமல்லாமல், தொழில்முனைவோராகி வேலைவாய்ப்பையும் உருவாக்குங்கள். சிறு சிறு தோல்வியைக் கண்டு கவலைப்படாதீர்கள். இந்த உலகில் தோல்வியை சந்திக்காதவர்கள் எவருமே கிடையாது.
மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன் போன்ற தலைசிறந்த மனிதர்களும்கூடதோல்வியை சந்தித்தவர்கள்தான். நேர்மறையான சிந்தனையோடு இருங்கள். அது உங்கள் லட்சியத்தை எட்ட நிச்சயம் உதவும் என்றார்.
பட்டம் பெற்ற 141 பேரில் 93 மாணவ, மாணவிகள் ஆசிரிய பயிற்சிப் படிப்பிலும், 27 மாணவ, மாணவிகள் முதுகலையிலும், 21 மாணவ, மாணவிகள் இளநிலையிலும் பட்டம் பெற்றனர்.
தேர்வாணையர் ஆ.சுருளியாண்டி, புல முதல்வர்கள், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கூடுதல் தேர்வாணையர் கா. முருகன் செய்திருந்தார்.
பல்கலைக்கழக பதிவாளர் சே. சந்தோஷ்பாபு வரவேற்றார். பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக இயக்குநர் தி. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

படிப்பினால் கிடைக்கும் உயர்வுக்கு வேறு எதுவும் இணையாகாது
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை டாடா ரியாலிட்டி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சி. வேலன் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:
இந்திய நாட்டின் மிகப்பெரிய பலமும், பலவீனமும் மக்கள் தொகைதான். இந்தியா 70 சதவீத இளைஞர்களைக் கொண்டிருந்தாலும், இன்றைய அளவில் சீனாவே உயர்ந்து நிற்கிறது. ஆனால் சீனாவில் இளைஞர்களின் சதவீதம் குறைந்து வருகிறது. அது நமக்கு பலம்தான்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு இயற்கை, விவசாயம் என பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது கல்விதான். இந்தியாவில் அரசும், பெற்றோர்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முதன்மையாகத் திகழ்கிறது.
நான் சிறிய பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். பொறியியலில் டிப்ளமோ படித்தேன். அதன்பிறகு நெடுஞ்சாலைத் துறையில் பணியில் சேர்ந்தேன். ஆனால் பொறியியல் படிக்க வேண்டும் என்ற பேராவல் எனக்குள் இருந்ததால், பகுதிநேரமாக பொறியியல் பட்டப் படிப்பு படித்தேன். கடலூரில் இருந்து சிதம்பத்துக்கு 50 கி.மீ. தூரம் பயணித்து படித்தேன். 53 வயதில் முனைவர் பட்டம் பெற்றேன். இதை நான் சொல்வதற்கு காரணம், ஆரம்ப காலத்தில் படிப்பை நிறுத்தியிருந்தால், இன்றைக்கு டாடா நிறுவனத்தில் இந்தப் பதவிக்கு வந்திருக்க முடியாது. படிப்பும், உழைப்பும் சேர்ந்திருக்கிறபோது கிடைக்கிற வெற்றியால் ஏற்படும் மகிழ்ச்சி அளப்பரியது. படிப்பினால் கிடைக்கும் உயர்வுக்கு இணையானது வேறு எதுவும் கிடையாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com