மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள்

நெல்லை -  வெண்ணிமலை
திருநெல்வேலி, மார்ச் 20: மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் மா.வெண்ணிமலை (53) போட்டியிடுகிறார். 
தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட வெண்ணிமநகரில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான இவர், அண்ணா நகரில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது மனைவி சாரதா, மருந்து வியாபாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மூத்த மகன் மாணிக்கவாசகம் பொறியாளர். இளைய மகன் சுப்பையா மருத்துவராக உள்ளார்.  கட்சிக்கு புதியவரான மா.வெண்ணிமலை கூறுகையில், "திருநெல்வேலி தொகுதியில் ஏராளமான உறவினர்கள் உள்ளனர். எனக்கு மிகவும் பரிச்சயமான ஊர் திருநெல்வேலி. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்.  திருநெல்வேலி தொகுதியில் மென்பொருள்  நிறுவனங்களை தொடங்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் முயற்சிப்பேன்' என்றார்.


தூத்துக்குடி -  பொன் குமரன்

தூத்துக்குடி, மார்ச் 20: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தொழிலதிபர் டி.பி.எஸ். பொன் குமரன் (59) போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராக பொன் குமரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தாமோதரன் நகரைச் சேர்ந்த இவர், முதுநிலை வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார். மூலிகைச் செடிகள், உப்பு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தைவழி தாத்தா பொன்னுசாமி நாடார் 1957 ஆம் ஆண்டு தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன், துறைமும், விமான நிலையம் ஆகியவற்றை மேம்படுத்தி தொழில் வளர்ச்சியை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என பொன் குமரன் வாக்குறுதி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி-  எபினேசர்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யத்தின்  வேட்பாளராக ஜெ. எபினேசர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு: பெயர்- ஜெ.எபினேசர்,  பிறந்த தேதி- 29.10.1986 ( 33), கல்வித் தகுதி- இறையியல் படிப்பில் டிப்ளமோ, மனைவி - சிந்தியா ஜெருசா,  குழந்தைகள்- 3 பெண், ஒரு ஆண், தொழில்- வணிகம், சொந்த ஊர்- நெல்லை மாவட்டம், வசிப்பது- சென்னை,'"என் தேசம், என் உரிமை' என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com