திருநெல்வேலி

களைகட்டாத தேர்தல் பிரசாரம்!

DIN


தென்மாவட்டங்களில் தூத்துக்குடி தவிர்த்து பிற பகுதிகளில் தேர்தல் பிரசாரம் களையிழந்து காணப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியாகவும், திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியாகவும் களமிறங்கியுள்ளன. அமமுகவுடன் எஸ்டிபிஐ கைகோத்துள்ளது. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை தனித்துக் களம்காண்கின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 13 நாள்கள் ஆகிவிட்டது. தொகுதி, வேட்பாளர் தேர்வு முடிந்து, சிவகங்கை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரைத் தவிர பிற தொகுதிகளுக்கு முக்கியக் கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கிவிட்டன. மக்கள் நீதி மய்யம் சார்பில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) வெளியாக உள்ளது.
வாக்குப் பதிவுக்கு 25 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், தென் மாவட்டங்களில் தூத்துக்குடி தவிர்த்து மற்ற பகுதிகளில் பிரசாரம் களைகட்டவில்லை. வேட்புமனு தாக்கல் தொடங்கி 5 நாள்கள் ஆகிவிட்டபோதிலும், முன்னணி கட்சிகள் வேட்புமனு தாக்கலையே தீவிரப்படுத்தவில்லை. வரும் செவ்வாய்க்கிழமையோடு வேட்புமனு தாக்கல் முடிவடையவுள்ளது.
சின்னங்களால் தாமதம்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைப் பொருத்தவரையில் சின்னம் ஒரு பிரச்னை இல்லை. ஆனால், சுயேச்சைகளாக போட்டியிடுபவர்கள் தங்களது வேட்புமனுவில் தங்களுக்கு விருப்பமான 3 சின்னங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாள்கள் ஆகிவிட்ட நிலையிலும், சுயேச்சைகளுக்கான சின்னங்களின் பட்டியல் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சனிக்கிழமை (மார்ச் 23) வரை வழங்கப்படவில்லை.
அதனால் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் சின்னங்களுக்கான பகுதியை விட்டுவிட்டு பூர்த்தி செய்து மனுதாக்கல் செய்து வருகிறார்கள். வழக்கு காரணமாக அமமுக வேட்பாளர்களும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டியுள்ளதால் சின்னத்துக்காக காத்திருக்கின்றனர். சின்னம் ஒதுக்கிய பின்பு தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கலாம் என, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைத் தவிர பிற கட்சியினர் தள்ளிவைத்துவிட்டனர்.
மேலும், தென் மாவட்டங்களைப் பொருத்தவரையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஒருசிலரைத் தவிர எஞ்சியவர்கள் புதுமுகமாக களமிறங்குகிறார்கள். அவர்கள், இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், பிரசாரத்தில் தீவிரம் காட்டத் தயங்குகிறார்கள். ஒருவேளை ஏதாவது காரணத்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் பிரசாரம் செய்தது, செலவு செய்த பணம் வீணாகிவிடுமோ என அஞ்சுகிறார்கள். எனவே, வேட்புமனு ஏற்கப்பட்ட பிறகே, பிரசாரத்தில் தீவிரம் காட்டலாம் என எதிர்பார்க்கிறார்கள். இதனால் தென் மாவட்டங்களில் தேர்தல் களம் களையிழந்து காணப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT