தூத்துக்குடியில் பன்றிக் காய்ச்சலால் சிறுவன் சாவு

தூத்துக்குடியில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 13 வயது சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார்.

தூத்துக்குடியில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 13 வயது சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார்.
தூத்துக்குடி, பாலையாபுரத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ஷக்தி கபில் (13). இவர், குறிஞ்சிநகரில் உள்ள தன் பாட்டி வீட்டில் சில நாள்களாக தங்கியிருந்தாராம். இந்நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 
5 நாள்களுக்கும் மேலாக காய்ச்சல் குறையாத நிலையில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு சேர்க்கப்பட்டார். எனினும் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை டெங்கு, பன்றிக் காய்ச்சலால் உயிரிழப்பு இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவன் ஷக்தி கபில் பன்றிக் காய்ச்சலால் இறந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பாலையாபுரம், குறிஞ்சிநகர் பகுதியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை முகாமிட்டு வீடுகளைச் சுற்றி மருந்துகள் தெளித்தும், அப்பகுதியினருக்கு பரிசோதனை மேற்கொண்டும் வருகின்றனர்.  சிறுவன் ஷக்தி கபிலின் உறவினர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் வேறு யாருக்கேனும் பாதிப்புள்ளதா என தொடர்ந்து கண்காணிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் சில நாள்களுக்கு முன்பு அத்திமரப்பட்டியைச் சேர்ந்த ஹெப்சிபா (57), முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி சாந்தினி (26) ஆகியோர் காய்ச்சல் பாதிப்பால் இறந்தனர். அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்ததாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் மருத்துவர்கள், டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com