தூத்துக்குடி மாநகராட்சியில் அனுமதியில்லாதகுடிநீர் இணைப்பை வரன்முறைப்படுத்த அழைப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் அனுமதியில்லாத குடிநீர் இணைப்பு வைத்திருப்போர் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் அனுமதியில்லாத குடிநீர் இணைப்பு வைத்திருப்போர் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி அனுமதியின்றி விதிமுறைகளை மீறி வீட்டு உரிமையாளர்களால் குடிநீர் இணைப்பு எடுக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரே குடிநீர் இணைப்பில் பல குடும்பங்கள் குடிநீரை பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.
 மேலும், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட குழாய்கள் பழைய மாநகராட்சி வார்டு பகுதியிலேயே அதிகளவில் உள்ளது தெரியவந்தது. வணிக பயன்பாட்டில் உள்ள குடிநீர் இணைப்புகள் அதிகளவில் குடியிருப்பு கட்டண விகிதத்திலேயே எடுக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
 இதுதவிர, பல வீடுகளில் நேரடியாக குடிநீர் இணைப்பில் மின்மோட்டாரை பொருத்தி குடிநீர் எடுத்து வருகின்றனர்.  இது மாநகராட்சி குடிநீர் உபவிதிகளுக்கு புறம்பானதாகும். அதன்படி, மாநகராட்சியின்  அனுமதியின்றியும், விதிமுறைகளுக்கு மீறியும் எடுக்கப்படும் குடிநீர் இணைப்புகளால் மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.  அதை சரி செய்யும் வகையில், மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் மாநகராட்சி அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை மற்றும் இதர கட்டணங்களை செலுத்தி குடிநீர் இணைப்புகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்.
 மேலும், மாநகராட்சியில் தவணை முறையில் குடிநீர் குழாய் இணைப்பு கட்டணங்களை செலுத்தி குடிநீர் இணைப்பு பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை வரன்முறைப்படுத்த தவணை முறையிலும் கட்டணங்களை செலுத்தி வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்.
 தவறும் நிலையில் டிசம்பர் 20 ஆம் தேதிக்கு  பிறகு மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வீட்டு உரிமைதாரர்களால் குடிநீர் இணைப்புகள் எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டால் உடனடியாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் கடுமையான அபராதமும் விதிக்கப்படும்.
எனவே, மாநகர பகுதிகளில்  மாநகராட்சியின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை முறையாக வரன்முறைப்படுத்திட ஏதுவாக மாநகராட்சியால் வழங்கப்படும் வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com