கஜா புயல் பாதிப்பு: தூத்துக்குடியில் இருந்து கிரேன்கள், மரம் வெட்டும் கருவிகள் அனுப்பி வைப்பு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில்,  தூத்துக்குடி துறைமுகம் மூலம் 5 கிரேன்கள்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில்,  தூத்துக்குடி துறைமுகம் மூலம் 5 கிரேன்கள், 10 மரம் வெட்டும் கருவிகள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
 கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், தூத்துக்குடி வஉசி துறைமுக கழகத்தின் சார்பில் கிரேன்கள் மற்றும் மரம் வெட்டும் கருவிகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி துறைமுக நுழைவு வாயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் 5 கிரேன்கள் மற்றும் 10 மரம் வெட்டும் இயந்திரங்கள் ஆகியவற்றை  கொடியசைத்து அனுப்பி வைத்தார். 
 தொடர்ந்து, வஉசி துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நா. வையாபுரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பல்வேறு நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வஉசி துறைமுக கழகத்தின் சார்பில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ளும் வகையில் 5 கிரேன்கள் மற்றும் 10 மரம் வெட்டும் இயந்திரங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன.  மேலும், ரூ.3.20 கோடி மதிப்பிலான 12 வகையான அத்தியாவசியப் பொருள்கள் 30 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் ஓரிரு நாள்களில் அனுப்பி வைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். 
நிகழ்ச்சியில், வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக செயலர் ஜிசுராய், போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன், தலைமை இயந்திர பொறியாளர் சுரேஷ்பாபு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com