புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

கோவில்பட்டி அருகே ரயில்பாதை மின்வயர் அறுந்ததால் ரயில்கள் தாமதம்

DIN | Published: 11th September 2018 08:04 AM

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் உயர்அழுத்த மின்சார வயர் அறுந்து தொங்கியதால், கோவில்பட்டி, கடம்பூர், குமாரபுரம் உள்ளிட்ட இடங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 
கோவில்பட்டி பகுதியில் திங்கள்கிழமை காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், கோவில்பட்டி ரயில் நிலையத்தை அடுத்த வேலாயுதபுரம் பகுதியில் ரயில்பாதையில் உயர்அழுத்த மின்சார வயர் அறுந்து தொங்கியதாம். இதனால், கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சாத்தூர் நோக்கி புறப்பட்ட இண்டர்சிட்டி ரயில் வேலாயுதபுரம் அருகே நிறுத்தப்பட்டது. இண்டர்சிட்டி ரயில் டீசலில் இயங்குவது என்பதால், சுமார் 5 மணியளவில் சாத்தூர் நோக்கி புறப்பட்டது.  இந்நிலையில், திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 4.13 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் செல்லும் விரைவு ரயில் 5.07 மணிக்கும் கோவில்பட்டி ரயில் நிலையம் வந்தன. மின்வயர் அறுந்திருந்ததால், 2 ரயில்களும் கோவில்பட்டி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.
பிறகு, ஜம்மு-காஷ்மீர் எக்ஸ்பிரஸ் டீசல் ரயில் என்பதால், 7.50 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சாத்தூர் நோக்கிப் புறப்பட்டது. குமாரபுரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு சுமார் 8.30 மணியளவில் சாத்தூரில் இருந்து புறப்பட்டது. கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தாதர் ரயில், விருதுநகரில் இருந்து டீசல் என்ஜின் கொண்டுவரப்பட்டு இரவு சுமார் 9 மணியளவில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சாத்தூர் புறப்பட்டது. 
மணியாச்சி, கடம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் மின்சார ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அவை கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து டீசல் என்ஜின் மூலம் சாத்தூர் வரை கொண்டு செல்லப்பட்டு, பிறகு அங்கிருந்து மின்சார ரயிலாக இயக்கப்படும். இதனால், அனைத்து ரயில்களும் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன.
 

More from the section

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
சாத்தான்குளம் அருகே அறுந்து விழுந்த மின் கம்பியால் 2,600 வாழைகள் எரிந்து நாசம்


சிறையில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு