குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனர்.

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனர்.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, ஸ்ரீவைகுண்டம்  சலவைத் தொழிலாளர் சமுதாயத் தலைவர் குட்டியப்பன் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
 சலவைத் தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டுக்கும் மேலாக  ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால்  கரையோரத்தில்  எங்களின் தொழிலுக்கு ஏற்ப வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். 
 இந்த  வீடுகளுக்கு  சொத்துவரி  கட்டி  மின் இணைப்பும் பெற்றுள்ளோம்.  இந்நிலையில், வட்டாட்சியர்,  குடியிருப்புகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் அதை காலி செய்திடுமாறும் கட்டாயப்படுத்தி வருகிறார்.  எங்களுக்கு அருகிலேயே மாற்று  இடம் தருவதாக சொல்லியும் மாற்று இடம் தரவில்லை.  எனவே,  எங்களது குடியிருப்புகளுக்கு அருகில் மாற்றுஇடம் தருவதுடன்,  வீடுகளை காலி செய்ய 6 மாத கால அவகாசமும் தர வேண்டும்.  தமிழக முதல்வரின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் எங்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்க வலியுறுத்தல்:  தூத்துக்குடி அருகேயுள்ள தருவைக்குளம் கிராம மக்கள் அளித்த மனுவில்,  தருவைக்குளம் பகுதி மக்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழில், உப்பளத் தொழில் மற்றும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம்.
 தாமிரவருணி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரானது  சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த சில மாதங்களாக இந்தத் திட்டத்தில் தருவைக்குளம் மக்களுக்கு குடிதண்ணீர் முறையாக வழங்கப்படவில்லை. 
வாரம்தோறும் வழங்கப்பட்டு வந்த குடிதண்ணீர் தற்போது 10 நாள்கள் அல்லது 15 நாள்களுக்கு ஒருமுறை என்ற ரீதியிலேயே வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் மிகவும் குறைந்த  அளவிலேயே  விநியோகிக்கப்படும் தண்ணீர் அனைத்து மக்களுக்கும் போதுமான அளவில் கிடைப்பதில்லை.
இதனால் தனியார்களிடம் இருந்து ஒரு குடம் தண்ணீர் ரூ.10, ரூ.15-க்கும் வாங்கி குடிக்கவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர்களை கட்டாயப்படுத்துவதாக புகார்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் விநாயகமூர்த்தி,  செயலர் பாஸ்கர்,  பொருளாளர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் ஆட்சியரிடம் அளித்த மனு: 
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், ஆலை அதிகாரிகள் சிலர் தங்களது நிறுவனத்தை திறப்பதற்கு ஏதுவாக தொழிற்சாலைக்கு ஆதரவாக பொதுமக்களை திரட்டிவந்து மனு அளிப்பது சரியானதல்ல.  அதுபோன்று தொழிற்சாலைக்கு ஆதரவாக வந்து மனு அளிக்குமாறும் சிலர் வணிகர்களை கட்டாயப்படுத்தி வருகின்றனர்.இதனால் வணிகர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  எனவே இதில் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com