திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சொந்தமானரூ. 3.69 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 3.69 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 3.69 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவின்கோவில் திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதன்படி, திருக்கோயில் இணை ஆணையர் பா.பாரதி தலைமையிலான பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டதில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டம், கோபாலசமுத்திரம் கிராமத்தில் இக்கோயிலுக்குச் சொந்தமான கட்டளை நிலம் 9 ஏக்கர் 80 சென்ட் ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்டறிந்தனர். அங்கு சென்ற இணை ஆணையர் பா.பாரதி, அலுவலக கண்காணிப்பாளர் இரா.சுப்புலெட்சுமி, பணியாளர்கள் கோ.வெங்கடேசன், பால்ராஜ் உள்ளிட்டோர் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை நில அளவையர் மூலம் அளவீடு செய்து, திருக்கோயிலுக்குச் சொந்தமான இடம் என்பதனை குறிக்கும் வகையில் பெயர்ப் பலகையையும் வைத்தனர். மீட்கப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 3 கோடியே 69 லட்சம் ஆகும்.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா.பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இக்கோயிலுக்கு சொந்தமான கட்டளை நிலங்கள் மற்றும் கோயில் பெயரிலான நிலங்களை எவ்வித உரிமமும் இன்றி அனுபவித்து வருபவர்கள் தங்கள் நிலம் தொடர்பான விவரங்களை கோயில் நிர்வாகத்திடம் உடனே தெரிவிக்க வேண்டும். அதன்பேரில், அறநிலையத் துறை சட்டவிதிகளுக்குள்பட்டு, முறையான பொது ஏலத்தின் மூலம் உரிய அனுமதி பெற்று தொடர்ந்து நிலங்களை அனுபவிக்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com