தூத்துக்குடி

ஸ்டெர்லைட் விவகாரம்: பொதுமக்களிடம் இன்று கருத்துக் கேட்பு

DIN


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்டுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினரிடம் பொதுமக்கள் தங்களது கருத்துகளை ஞாயிற்றுக்கிழமை (செப். 23) தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் கடந்த மே மாதம் 28ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, அந்நிறுவனம் தில்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவில், இந்த விவகாரத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற மேகாலய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால், மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக விஞ்ஞானி சதீஷ் டி. கர்ஹோட்டி, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய தென் மண்டல முதுநிலை சுற்றுச்சூழல் பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, அவர்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (செப்.23) முற்பகல் 11.30 மணியளவில், தூத்துக்குடி 3ஆம் மைல் பகுதியில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கூட்டரங்கில் வைத்து ஸ்டெர்லைட் ஆலை குறித்த பொது மக்களின் கருத்துகளை கேட்க உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், குழுக்கள், சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ தங்கள் கருத்துகளை குழுவிடம் தெரிவிக்கலாம் என்றார் அவர்.


அமைதியான முறையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ள குழுவிடம் பொதுமக்கள் அமைதியான முறையில் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலர் வைகோ கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆலையின் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவிடம் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்துள்ளோம்.
தாமிர ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் புதுக்கோட்டை உப்பாற்று ஓடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டு, அவற்றின் மீது சவுடு மணல் கொட்டிவைக்கப்பட்டுள்ளது. இதனால், நிலமும், நிலத்தடி நீரும் பாதிப்படைந்துள்ளது. தாமிரக் கழிவுகளை எங்கு கொட்டினாலும் அது நோய்களை ஏற்படுத்தும். அதனால் இந்த ஆலையை மூடவேண்டும் எனக் கூறியுள்ளோம்.
இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 23) நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டு, தங்களது கருத்துகளை அமைதியான முறையில் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.


அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய வலியுறுத்தல் தூத்துக்குடியில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என வழக்குரைஞர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற வழக்குரைஞர் விமல் ராஜேஷ்ராஜ் சனிக்கிழமை அளித்த பேட்டி:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதன் முதலாக நடைபெற்ற போராட்டத்தின்போது கைதான 8 பேரில் நானும் ஒருவன். மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்த ஆலை ஆய்வு செய்யப்பட, அகற்றப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், அதேசமயம் சுற்றுச்சூழல் மாசடைய இன்னும் பல தொழிற்சாலைகள் காரணமாக உள்ளன. எனவே, மத்திய ஆய்வுக் குழுவினர் தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலிருந்தும் வெளிவரும் மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக வழக்குரைஞர்கள் சிலர் இணைந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த குழுவிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT