"சமூகத்தை மாற்றக் கூடியவர்களாக மக்களைத் தயார்படுத்த வேண்டும்'

சமூகத்தை மாற்றக் கூடியவர்களாக  மக்களைத் தயார்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன் பேசினார்.

சமூகத்தை மாற்றக் கூடியவர்களாக  மக்களைத் தயார்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன் பேசினார்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் 57ஆவது ஆண்டு மகாகவி பாரதி விழா, எட்டயபுரத்தில் உள்ள பாரதி நினைவு மணிமண்டப வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான சோ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றப் பொருளாளர் பா. ரமணி, பாரதி ஆய்வாளர் இளசை மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவின் தொடக்க நிகழ்வாக தமிழகம், கேரளம், பஞ்சாப், பிகார், தில்லி மாநிலங்களை சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாரதி அன்பர்கள், பாரதி வேடமணிந்த பள்ளி மாணவ, மாணவியர் பாரதி பிறந்த இல்லத்தில் உள்ள பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர். 
தொடர்ந்து பாரதி பிறந்த இல்லம் முன்பிருந்து தேவராட்டம், கும்மியாட்டத்துடன் பாரதி உருவப்படத்துடன் அகில இந்திய எழுத்தாளர்கள், பாரதி அன்பர்கள் பங்கேற்ற பாரதி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பாரதி நினைவு மணிமண்டப வளாகத்தில் நிறைவடைந்தது. அங்கு பாரதியின் முழுஉருவச்சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பின்னர் விழா கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரதி ஆய்வாளர் இளசை மணியன் தொகுத்து எழுதி கோவை விஜயா பதிப்பகம் பிரசுரித்த ரஷிய புரட்சியும், இந்தியாவும் என்ற தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டது. இந்திய,  ரஷிய கலாசார நட்புறவுக் கழக தமிழக பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட,  அந்த அமைப்பின் தேசியக் குழு உறுப்பினர் கே. சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். நூல் ஆசிரியர் இளசை மணியன் ஏற்புரையாற்றினார். 
விழாவில், தாமரை கலை இலக்கிய மாத இதழின் ஆசிரியரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினருமான சி. மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: 
பாரதியை வெறும் கவிஞராக மட்டும் பார்க்க முடியாது. ஒரு சமூகத்தை, ஒரு நாட்டின் நாடித்துடிப்பை மிக சரியாக புரிந்து கொண்டு அதை ஒரு அரசியலாக மாற்றிய பெருமை பாரதிக்கு இருக்கிறது. 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்தார்கள். இதேபோன்ற ஒரு நிகழ்வு 110 ஆண்டுகளுக்கு முன்பு 1908 ஆம் ஆண்டும் தூத்துக்குடியில் நிகழ்ந்தது. பிரிட்டிஷ்காரர் ஹார்வியால் நடத்தப்பட்ட கோரல் மில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தின்போது போராட்டத்தை முன்னின்று நடத்திய வ.உ.சியும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்படுகிறார்கள். இந்த தகவல் மக்களிடம் நெருப்பாக பரவியதையடுத்து தூத்துக்குடி நகராட்சி அலுவலகம், தபால் அலுவலகம், கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மக்களால் அடித்து நொறுக்கப்படுகிறது. காவல்துறையால் துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. மக்கள் சாகடிக்கப்பட்டார்கள். இப்போது நடந்ததை போல் அப்போதும் நடந்தது. அப்போது பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றது. இப்போது நம்மை நாமே ஆளுகிறோம். 
110 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வையும், வ.உ.சி. கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னையில் பல முற்போக்கு அமைப்புகள் ஊர்வலம் சென்றார்கள். அதில் ஒரு அமைப்புக்கு தலைமை வகித்தவர் பாரதி. இதெல்லாம் இன்றைக்கும் காவல்துறையின் ரகசிய குறிப்பில் உள்ளது. 
இன்றைக்கு உள்ள பல பாரம்பரிய பத்திரிகைகளுக்கு முன்னோடி எது என்றால் பாரதி தொடங்கிய இந்தியா பத்திரிகைதான். பாரதிக்கு அன்றைக்கே உலக ரீதியாக தொடர்பு இருந்தது. உலகளவில் புரட்சிகர மையங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் பாரதிக்கு தொடர்பு இருந்தது.  உலகத்தையே குலுக்கிய ரஷிய புரட்சியை பற்றியெல்லாம் பல ஒப்பீடுகளுடன் இந்தியா பத்திரிகையில் பாரதி எழுதியிருக்கிறார்.
சாதி இல்லை, மதம் இல்லை என்று எழுதியதோடு மட்டுமல்லாது தனது சொந்த வாழ்க்கையில் அதை நிறைவேற்றிக் காட்டினார் பாரதி. சொன்னதை போல் செய்து காட்டிய கவிஞர் பாரதி என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சமூகத்தை மாற்றக்கூடியவர்களாக மக்களைத் தயார்படுத்த வேண்டும். இன்றைய காலத்துக்கு மிக பொருத்தமாகவும், தேவையாகவும் உள்ள பாரதியின் கருத்துகளையும், பாரதிகளையும் உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அனைவருக்கும் இருக்கிறது என்றார். 
நிகழ்ச்சியில், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச்செயலர் ராஜேந்திர ராஜன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சி. சொக்கலிங்கம், பஞ்சாபி சாகித்ய அகாதெமி தலைவர் சுத்தேவ் சிங், எழுத்தாளர்கள் த. அறம், வினீட் திவாரி, மோகன்தாஸ், லட்சுமி நாராயணா, ராச்சபலம் சந்திர சேகர ரெட்டி, வீராச்சேரி, சு. நடராஜன், பாரதி முற்போக்கு வாலிபர் சங்க நிர்வாகிகள் மு. மணிபாரதி, முருகேஷ், வெங்கடேஷ் ராஜா, கனகா, பாரதி இல்ல காப்பாளர் மகாதேவி, பாரதி மணிமண்டப வழிகாட்டி பினோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com