ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்கள் மனு

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தின்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தின்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அதிமுகவை சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன், திமுகவை சேர்ந்த தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கீதாஜீவன் ஆகியோர் தனித்தனியே மனு அளித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீப்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை கருத்துகளைக் கேட்டனர். அப்போது, ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பி. சண்முகநாதன் அளித்த மனு விவரம்:
ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தாமிரவருணி ஆற்று நீரைப் பயன்படுத்துவதால் பொதுமக்களும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலையின் கழிவுகள் காரணமாக ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலமும், நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை காரணமாக மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. தற்போது, ஆலையை தமிழக அரசு மூடியுள்ள நிலையில், ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீதாஜீவன் எம்எல்ஏ: தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதாஜீவன் அளித்த மனு விவரம்:
ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நோய்களுக்குள்ளாகி வருகின்றனர். நிலத்தடி நீர் மாசுபடுவதற்கும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கும் ஆலை ஒரு காரணமாகும். ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைகிறது.  காற்று, நிலம், நீர் மாசடைந்து சுற்றுச்சூழல் சீர்குலைக்கப்படுகிறது. அதனால் மக்களின் வாழ்வுரிமை அழிகிறது. ஆலையால் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது அரசின் கடமையாகும்.
எனவே, பொதுமக்களை மதித்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிப்காட்டில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com