தூத்துக்குடி

கயத்தாறு வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: துணை முதல்வர், மத்திய அமைச்சர் அஞ்சலி

DIN


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உடல் சனிக்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கயத்தாறு அருகேயுள்ள சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி - மருதாத்தாள் தம்பதி மகனான சுப்பிரமணியன்(28), கடந்த 5  ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரிசர்வ் காவல் படையில் (சிஆர்பிஎஃப்) சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி சவலாப்பேரிக்கு வந்துவிட்டு, பிப். 10ஆம் தேதி மீண்டும் பணிக்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், பிப். 14ஆம் தேதி பாதுகாப்புப் படையின் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் சுப்பிரமணியன் வீரமரணம் அடைந்தார்.
இதையடுத்து, சுப்பிரமணியன் உடல் தனி விமானம் மூலம் மதுரை வந்தது. அங்கிருந்து சனிக்கிழமை மாலை சவலாப்பேரிக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜு, ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஜீவன், ஹெச்.வசந்தகுமார், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு உள்பட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ரூ.20 லட்சம் நிவாரணம்: சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணியிடம் தமிழக அரசின் நிவாரண நிதியான ரூ,.20 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆகியோர் வழங்கினர்.
பின்னர், சுப்பிரமணியனின் உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குமாரகிரி சாலையில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில் 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT