காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த கயத்தாறு வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்:  துணை முதல்வர், மத்திய அமைச்சர் அஞ்சலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உடல் சனிக்கிழமை அரசு மரியாதையுடன்


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உடல் சனிக்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கயத்தாறு அருகேயுள்ள சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி - மருதாத்தாள் தம்பதி மகனான சுப்பிரமணியன்(28), கடந்த 5  ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரிசர்வ் காவல் படையில் (சிஆர்பிஎஃப்) சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி சவலாப்பேரிக்கு வந்துவிட்டு, பிப். 10ஆம் தேதி மீண்டும் பணிக்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், பிப். 14ஆம் தேதி பாதுகாப்புப் படையின் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் சுப்பிரமணியன் வீரமரணம் அடைந்தார்.
இதையடுத்து, சுப்பிரமணியன் உடல் தனி விமானம் மூலம் மதுரை வந்தது. அங்கிருந்து சனிக்கிழமை மாலை சவலாப்பேரிக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜு, ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஜீவன், ஹெச்.வசந்தகுமார், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக சார்பில் சி.த.செல்லப்பாண்டியன், ஆவின் தலைவர் சின்னத்துரை, அமமுக நிர்வாகிகள் மாணிக்கராஜா, சுந்தரராஜன், பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பாலாஜி, காங்கிரஸ் சார்பில் சீனிவாசன், தமாகா சார்பில் கதிர்வேல்,   மதிமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.ரமேஷ், செல்வம், விநாயகா ரமேஷ், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் வினோத்குமார், ராமசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அர்ச்சுனன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பாஸ்கரன் உள்பட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ரூ.20 லட்சம் நிவாரணம்: சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணியிடம் தமிழக அரசின் நிவாரண நிதியான ரூ,.20 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆகியோர் வழங்கினர்.
பின்னர், சுப்பிரமணியனின் உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குமாரகிரி சாலையில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில் 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை டிஐஜி பிரவீண் சி.காத், கமாண்டன்ட் ரோகினிராஜன், துணை கமாண்டன்ட் ஆறுமுகம், உதவி கமாண்டன்ட் வெங்கடேஷ், மகேந்திரன், சிஆர்பிஎஃப் எஸ்.பி. அமிர்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கோட்டாட்சியர்  விஜயா, வட்டாட்சியர் லிங்கராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமார், திருநெல்வேலி மாநகர துணை ஆணையர்கள்  மாலிக் பெரோஸ்கான், சுகுணாசிங், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தர்மலிங்கம், ஜெபராஜ், ரமேஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com