"ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்'

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றார் பாஜக மாநிலத் தலைவரும், தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றார் பாஜக மாநிலத் தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை செளந்தரராஜன்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:  அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும் கூட்டணி அதிமுக-பாஜக கூட்டணி. ஜிஎஸ்டி முறையால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ பிரசாரத்தின்போது  குற்றஞ்சாட்டி உள்ளார். சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடுத்த கட்சி பாஜக. ஜிஎஸ்டி முறையால் சரியான கணக்கை சிறுவணிகர்கள் காட்டுவதன் மூலம் அவர்கள் எளிய முறையில் வங்கிகளில் கடன்களை பெறமுடிகிறது.
தூத்துக்குடி மக்கள் தேசியம், தெய்வீகத்தையும் மதிப்பவர்கள். இது ஆன்மிக பூமி. சுதந்திர போராட்ட வீரர்களை தந்த மண் என்பதால் இந்த பூமி தேசியத்தின் பக்கம் இருக்கும் என்பது எனது கருத்து. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எத்தனை பயன் கிடைக்கும் என்பதை இவ்விரு அரசுகள் இணைந்திருப்பது மூலம் தெரிகிறது. என்னை  சுட்டிக் காட்டியோ, பாஜகவை சுட்டிக் காட்டியோ ஊழல் குற்றச்சாட்டை யாரும் சொல்ல முடியாது என்பதை நாடு முழுமைக்கும் கூறிக்கொள்கிறேன். நேர்மையான அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் தூத்துக்குடி மக்களை அணுகுகிறேன். நாகரிகமில்லாத வகையில் பிரசாரம் செய்துவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தங்களது நிலைப்பாடு குறித்து ஏன் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றார் அவர்.
 பேட்டியின்போது,  தொகுதி பாஜக பொறுப்பாளரும் கட்சியின் மாநில துணைத்தலைவருமான பி.டி. அரசகுமார்,  செய்தி தொடர்பாளர் கரு.நாகராஜன்,  மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜன், முரளி யாதவ், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பாலாஜி, செயலர் சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com