தனியார் சிமென்ட் ஆலைக்கு எதிராக  விவசாயிகள் போராட்டம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீர் வழித்தடப் பகுதியை ஆக்கிரமித்து பாதை அமைக்கும் பணியை மேற்கொண்ட

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீர் வழித்தடப் பகுதியை ஆக்கிரமித்து பாதை அமைக்கும் பணியை மேற்கொண்ட தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து,  அப்பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை அருகேயுள்ள உஞ்சினி கிராமத்தில் தனியார் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்பு கல் சுரங்கம் உள்ளது. இங்கே வெட்டி எடுக்கும் சுண்ணாம்புக் கற்களை லாரிகள் மூலம் உஞ்சினி மற்றும் நல்லாம்பாளையம் கிராமங்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டுவந்தன. இதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே இலங்கைச்சேரி கிராமத்தில் உள்ள நீர்வழித் தடங்களை ஆக்கிரமித்து பாதை அமைத்து லாரிகளை இயக்க கடந்த சில ஆண்டுகளாக சிமென்ட் ஆலை நிர்வாகம் முயற்சி செய்துவந்தது. இதையறிந்த அப்போதைய ஆட்சியர் சரவணவேல்ராஜ் ஆக்கிரமிப்பை அகற்றினார்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் குறிப்பிட்ட  இடத்தில்  பொக்லைன் மற்றும் கிரேன்களைக் கொண்டு நீர்நிலைகளை ஆக்கிரமித்து பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டது சிமென்ட் ஆலை நிர்வாகம். 
இதனைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் திரண்டு வந்து பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த செந்துறை போலீஸார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சிமென்ட் ஆலை  நிர்வாகத்திடம் உடையார்பாளையம் கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதான முடிவு ஏற்பட்ட பின்னரே சாலை பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com