கல்வியில் முன்னேறி வரும் பெரம்பலூர் மாவட்டம்

தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டமாகக் கருதப்படும் பெரம்பலூர் மாவட்டம், கல்வித் துறையில் படிப்படியாக முன்னேறி வருகிறது.


தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டமாகக் கருதப்படும் பெரம்பலூர் மாவட்டம், கல்வித் துறையில் படிப்படியாக முன்னேறி வருகிறது.
கிராமப்புறங்களை அதிகளவில் கொண்ட இம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கடந்த காலங்களில் உயர் கல்விக்காக திருச்சிக்கு சென்று வந்தனர். இந்நிலையில், அண்மைக்காலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும், அரசுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களும் அதிகரிக்கத் தொடங்கின.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் 3 ஆம் இடம் பெற்றது. இதன் மூலம் கல்வியில் வளர்ச்சியடைந்த சென்னை, கோவை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது பெரம்பலூர். 
நிகழாண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 4,100 பேர் தேர்வெழுதி, அவர்களில் 3,764 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி வீதம் 91.80 ஆகும். அதேபோல, அரசு உதவிபெறும் பள்ளிகள் 4இல் 2 பள்ளிகளும், சுயநிதி பள்ளிகள் 13இல் 9 பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகள் 15இல் 12 பள்ளிகளும் என மொத்தம் 30 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன.
71 மேல்நிலைப் பள்ளிகளில், 30 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன.  கடந்தாண்டு 4 அரசு பள்ளிகள் உள்பட 24 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன. 
கடந்தாண்டு பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் மாநில அளவிலான தேர்ச்சி தர வரிசை பட்டியலில் 94.10 சதவீத  தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் 12ஆவது இடத்தை பெற்றிருந்தது. நிகழாண்டு 1.5 சதவீதம் அதிகரித்து 95.15 சதவீதம் பெற்று, 9 இடம் முன்னேறி மாநில அளவில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது. 
கடந்தாண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 4 அரசுப் பள்ளிகள், 1 அரசு உதவிபெறும் பள்ளி, 7 சுயநிதி பள்ளி,  12 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 24 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. ஆனால், நிகழாண்டு  30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளன. 
சூப்பர் 30 சிறப்பு வகுப்பு மாணவர்கள்:  அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவம் 30, சிறப்பு பொறியியல் 30 ஆகிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, சூப்பர் 30' என்னும் பெயரில் சிறப்பு வகுப்புகள் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன.
இந்த சிறப்பு வகுப்புகளில் அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இங்கு பயின்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட சூப்பர் 30 என்ற சிறப்பு வகுப்பில் பயின்ற 67 மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில், 10 பேர் 500க்கும் மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியது:
முதல் பருவத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, இரண்டாம் பருவத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முதல் திருப்புதல் தேர்வு ஆகியவை முடிந்த பின்னர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களால் மீளாய்வுக் கூட்டம், பாட ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 
ஒவ்வொரு தேர்விலும் மாணவர்களின் தேர்ச்சி வீதம் அதிகரித்து முன்னேற்றம் அடைந்தனர். பாட ஆசிரியர்களால் மதிப்பெண் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் மூலம் மாணவர்களுக்கு மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு, விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதுபோன்ற செயல்பாடுகளாலும் மாணவர்களின் தேர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது என்றனர். 
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு. அருளரங்கன் கூறியது:
நிகழாண்டு 9 இடங்கள் முன்னேறி 3 ஆம் இடம் பெற்றதற்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் விருப்பத்திற்கேற்ப, எந்தவித நெருக்கடிக்கும் உள்ளாக்காமல் பாடம் நடத்த விட்டதால் இந்த இடத்தைப் பெற்றுள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com