ஜம்முவில் தீவிரவாதத் தாக்குதல்: அரியலூர் வீரர் சாவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் அரியலூரைச் சேர்ந்த வீரர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகேயுள்ள கார்குடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னையன் - சிங்காரவள்ளி தம்பதியின் மகன் சிவசந்திரன் (38). 
இவருக்கு திருமணமாகிச் சென்றுள்ள ஜெயந்தி, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஜெயசித்ரா என இரு சகோதரிகள். சகோதரர் செல்வேந்திரன் சென்னையில் கடந்தாண்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
கடந்த 1980-ல் பிறந்த சிவசந்திரன்(38), கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்து காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.  2014-ல் காந்திமதி என்பவரை திருமணம் செய்த இவருக்கு 2 வயதில் சிவமுனியன் என்ற மகன் உள்ளார். ஜனவரி மாத முதல் வாரத்தில் கார்குடிக்கு வந்த சிவசந்திரன், மாலை அணிந்து சபரிமலை  சென்று விட்டு பின்னர், பிப். 9 ஆம் தேதி மீண்டும் பணியில் சேரச் சென்றுள்ளார். 
இந்நிலையில் ஜம்முவில் நடந்த தாக்குதலில் சிவசந்திரன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கதறி அழுதனர்.  
சிவசந்திரனின் மனைவி காந்திமதி கூறுகையில்,  2 வயது மகனுடன், வயதான மாமனார், மாமியாருடன் எவ்வாறு வாழப்போகிறேன்.  நாட்டைப் பாதுகாக்கச் செல்கிறேன் எனக் கூறி சென்றார். 
தற்போது, எங்களைப் பாதுகாக்க யாரும் இல்லையே என கண்ணீர் மல்க கூறினார்.சிவசந்திரனின் தந்தை சின்னையன் கூறுகையில்,  வீட்டுக்கு ஒரு பிள்ளையாக வைத்திருந்த சிவசந்திரனை இழந்து நிற்கிறோம். எங்களது காலத்துக்கு பின்பு மருமகளையும், பேரப்பிள்ளையையும் பார்த்துக்கொள்ள ஆள் இல்லையே என்றார். 
இரங்கல்...சிவசந்திரன் வீர மரணம் அடைந்ததையறிந்த சுற்று வட்டார  கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள்,பல்வேறு அமைப்பினர், கட்சியினர்  சிவசந்திரன்  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com