அரியலூர், பெரம்பலூரில் உழவர் திருநாள் கொண்டாட்டம்

அரியலூர் மாவட்டம் முழுவதும் உழவர் திருநாள் வியாழக்கிழமை கோலகலமாக கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்டம் முழுவதும் உழவர் திருநாள் வியாழக்கிழமை கோலகலமாக கொண்டாடப்பட்டது.
உழவர் திருநாளையொட்டி, அலங்காரத்துடன் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த காளைகள், பசு மாடுகள், எருமைகள் உள்ளிட்ட மாடுகளும், ஆடுகளும் அவிழ்த்து விடப்பட்டன.
சிறுவர் சிறுமியர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், சாக்கு ஓட்டம், எலுமிச்சை கரண்டி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
இதேபோன்று இளைஞர்களுக்கு கபடி, மட்டைப் பந்து, ஓட்டப் பந்தயம், சைக்கிள் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் போட்டிகள், பெண்களுக்கு கோ கோ, கும்மியடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றது. முன்னதாக பெண்கள், சிறுவர் சிறுமிகள் அனைவரும் புத்தாடை அணிந்து, பெரியவர்களிடம் ஆசி பெற்று தங்களுக்கு அருகிலுள்ள விளையாட்டு திடல்களில் சென்று உழவர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் செந்துறை அருகேயுள்ள பழைய அங்கனூர் கிராமத்தில் இணைந்த கைகள் அமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீனிவாசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். டிஎஸ்பி மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
காணும் பொங்கலையொட்டி, ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள சுற்றுலா தலமான அருள்மிகு பிரகதீசுவரர் கோயிலில் வழக்கத்தைவிட வியாழக்கிழமை மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதேபோல் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திலும் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்கா, விசுவக்குடி நீர்த்தேக்கம், சாத்தனூர் கல்மரப் பூங்கா, ரஞ்சன்குடி கோட்டை, வெள்ளாற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் காணும் பொங்கல் தினமான வியாழக்கிழமை காலை முதலே தங்களது குடும்பத்தினர், உறவினருடனும் கூடினர்.
ஆட்சியரக வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் பெரியவர்கள், சிறியவர்கள் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். பெரம்பலூர் நகர்ப்புறம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் கோலப் போட்டிகள், பானை உடைத்தல், கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான காணும் பொங்களை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்க்காவல் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com