சிமென்ட் விலை திடீர் உயர்வு: கட்டுமானப் பணிகள் பாதிப்பு

மணலைத் தொடர்ந்து சிமென்ட் விலையும் திடீரென உயர்ந்துள்ளதால் மாநிலத்தில் கட்டுமானத் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


மணலைத் தொடர்ந்து சிமென்ட் விலையும் திடீரென உயர்ந்துள்ளதால் மாநிலத்தில் கட்டுமானத் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் தொழில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது சிமென்ட் விலையும் உயர்ந்துள்ளதால் சாதாரண மக்களின்  வீடு கட்டும் கனவு என்பது கானல் நீராகிவருகிறது. அதுமட்டுமின்றி இரும்பு, அலுமினியம் ஆகியவற்றின் விலையும் 30 சதவீத விழுக்காடு உயர்ந்துவிட்டது. இதற்குமேல் போக்குவரத்துச் செலவு, மின்சாரம், தொழிலாளர் ஊதியம் என அனைத்தையும் சேர்த்தால் கட்டுமானத் தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்பது கண்கூடு.  
கடந்தாண்டு ரூ. 350-க்கு விற்பனை செய்யப்பட்ட            50 கிலோ சிமென்ட் மூட்டை விலை திடீரென ரூ. 400 முதல் 450 வரை விற்கப்படுகிறது. சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் காரணமின்றி சிமென்ட் விலையை அதிகரித்து இருப்பதால், அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது. 
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால் பெங்களூருவில் 52 ரூபாயும், சென்னையில் 62 ரூபாயும், ஹைதராபாத்தில் 77 ரூபாயும் சிமென்ட் மூட்டை விலை உயர்ந்துள்ளது. இதுவே வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் சிமென்ட் மூட்டையின் விலை அதிகபட்சமாக 26 ரூபாய் வரையில் மட்டுமே உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வரை சிமென்ட் விலை ரூ. 180-க்கு விற்பனை செய்யப்பட்டது. 2011-12-இல் ரூ. 260 ஆனது. 2013-14-இல் ரூ.330 ஆனது. 2014-15-இல் ரூ.350 ஆனது. அதன் பிறகு கட்டுக்குள் இருந்த சிமென்ட் விலை தரத்திற்கேற்ப கடந்தாண்டு ரூ.375-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரத்தில் இருந்து சிமென்ட் மூட்டை விலை மீண்டும் ஏறுமுகம் கண்டு தரத்திற்கேற்ப ரூ.400-450 ஆக அதிகரித்துள்ளது. சில்லரை விற்பனையில் 37 விழுக்காடு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சிமென்ட் விலை உயர்வால் தமிழகத்தில் கட்டுமானத் தொழில் பாதிப்புக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. இதனால் பல லட்சம் கோடி அளவிலான கட்டுமானத் தொழில், நாட்டுக்கு பொருளாதார ரீதியிலான பாதிப்பை விளைவிக்கும். சிமென்ட் மூட்டை விலை உயர்வால் தமிழ்நாட்டின் சிறு நகரங்களிலும் கட்டுமானத் தொழில் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த விலை உயர்வு கட்டுக்குள் வராதபட்சத்தில், கட்டடப் பணிகளுக்காக கட்டுமான நிறுவனங்கள் விதித்துள்ள கட்டணம் பல மடங்கு உயரும் அபாயமும் உள்ளது.
   இதுகுறித்து ஏஐடியுசி அரியலூர் மாவட்டச் செயலர் டி.தண்டபாணி கூறியது:
தமிழகத்தில் வளர்ந்து வரும் மாவட்டங்களின் வரிசையில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இந்த மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளர்கள் உள்ளனர்.
அரியலூர் மாவட்டங்களில் சிமென்ட் தயாரிக்கத் தேவையான சுண்ணாம்புக் கல் உள்ளிட்ட மூலப் பொருள்கள் உள்ளதால், 10 சிமென்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த மாவட்டத்தில் இருந்து, தினசரி சுமார் 30 ஆயிரம் டன் சிமென்ட் மூட்டைகள் உற்பத்தியாகின்றன. இவை  தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 
இந்நிலையில், தமிழகத்தில் சிமென்ட் விலை ரூ.400 -450 வரை விற்கப்படுகிறது. வெளி மாநிலங்களில் தரத்திற்கேற்ப ரூ.350-க்கு விற்கப்படும் நிலையில் சிமென்ட் விலை அதிகரிப்பால் கட்டடப் பணியைத் தொடங்கியுள்ள நடுத்தர மக்கள், அதை முடிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், கட்டட  ஒப்பந்ததாரர்கள் திடீர் சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானப் பணிகளை நிறுத்தியதால், மாவட்டம் முழுவதும், கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான கட்டடத் தொழிலாளர்கள் வேலையின்றி சிரமப்படுகின்றனர்.      
கட்டடப் பணிக்குத் தேவையான மணல் 3 யூனிட்டுக்கு ரூ.35 ஆயிரத்துக்கும், எம்.சான்ட் 3 யூனிட்டுக்கு ரூ.11,500-க்கும், முக்கால் ஜல்லி ஒரு யூனிட்டுக்கு 2,500-க்கும், ஒன்றரை ஜல்லி ஒரு யூனிட்டுக்கு ரூ.2 ஆயிரத்துக்கும், கம்பி கிலோ ரூ.56-66-க்கும், செங்கல் ஒன்றுக்கு ரூ.6-க்கும், ஒரு லோடு செங்கலைப் பொறுத்து ரூ. 26,000 - ரூ.30,000 ஆயிரம் வரைக்கும் விற்கப்படுவதால் கட்டடப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.நடுத்தர வர்க்கத்தினர் தங்களது கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க எண்ணியிருந்த நிலையில், தற்போது சிமென்ட் மூட்டை ரூ.70 வரை உயர்ந்துள்ளதால் செய்வதறியாது திகைத்துள்ளனர்.      எனவே, தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு, சிமென்ட் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, முடங்கிப்போன கட்டுமானப் பணிகள் மீண்டும் தீவிரமடைவதோடு, நடுத்தர மக்களையும்,  கட்டடத் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களையும் காப்பாற்ற முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com