குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் ஆட்சியரகம் வந்த கிராம மக்கள்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 323 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் கரூர் மாவட்டம் ஜெகதாபி ஊராட்சிக்குட்பட்ட மோளக்கவுண்டனூர் கிராமமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் போர்க்கால அடிப்படையில் எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
தார் கலவை ஆலையை நடத்த அனுமதிக்கக் கூடாது: அரவக்குறிச்சி அடுத்த வளையாபாளையம் கிராம மக்கள் எங்கள் கிராமம் ஏற்கெனவே நொய்யல் ஆற்றில் கலந்து வரும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தார் கலவை ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆலையால் எங்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே இந்த ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வழங்கிய மனுவில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் என ஏழு உட்பிரிவுகளையும் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட உரிய நடவடிக்கை அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தினர் வழங்கிய மனுவில், கரூர் சிஎஸ்ஐ ஆலயத்தின் 125 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆலயம் முன் பெரிய சிலுவை வைக்கப்பட்டுள்ளது. இதனை மறைக்கும் வகையில் கோயிலைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவிடவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com