மாநில, தேசிய அளவில் தூய்மை பள்ளி விருது: டி.செல்லாண்டிபாளையம் பள்ளிக்கு ஆட்சியர் பாராட்டு

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய  அளவில் இரண்டாமிடத்தையும் பெற்ற டி.செல்லாண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார்.
     மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் மாணவ - மாணவிகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களைக் கற்பிக்கும் வகையில், தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. 
இதில் டி.செல்லாண்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் தேசிய அளவில் 2 ஆம் இடத்தையும்,  மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்றனர். மேலும், கரூர் மாவட்டத்தில் மட்டும் 48 பள்ளிகள் மாவட்ட அளவிலான விருதுக்குத் தேர்வாகியுள்ளனர். 
தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.செல்லாண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கடந்த செப். மாதம் சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், புதுதில்லியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும் விருதுகள் வழங்கி கௌரவித்தனர். இதைத் தொடர்ந்து, தேசிய, மாநில அளவில் விருதுபெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு விழா ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில், தேசிய அளவில் வெற்றி பெற்ற டி.செல்லாண்டிபாளையம் பள்ளியின் தலைமையாசிரியர் செங்குட்டுவன் மற்றும் அப்பள்ளி மாணவ-மாணவிகளையும் பாராட்டிய ஆட்சியர் த.அன்பழகன், மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 48 பள்ளிகளில் மேற்கண்ட அனைத்து தலைப்புகளில் சிறந்து விளங்கிய 7 பள்ளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பிலான காசோலை மற்றும் சான்றிதழ்களையும், மீதமுள்ள பள்ளிகளுக்கு தலா ரூ.5,000 மதிப்பிலான காசோலை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து, "தூய்மையான பாரதம், தூய்மைப் பள்ளி' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் 3 பரிசுகளாக முறையே ரூ.500, ரூ.400, ரூ.300 ரொக்கம், புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தங்கவேல், மாவட்ட கல்வி அலுவலர்கள் கனகராஜ், கபீர், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com