அமராவதியில் திடீர் வெள்ளம்; வீணாகும் நீரைச் சேமிக்க தடுப்பணை தேவை: விவசாயிகள் கோரிக்கை

அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதையடுத்து ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால்


அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதையடுத்து ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கடலில் கலந்து வீணாகும் நீரைச் சேமிக்க ஆற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையின் நீர் பிடிப்புப் பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. அணைக்கு நீரின் வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நேர நிலவரப்பட்டி 2020 கன அடியாக உள்ளது. மேலும் அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 100 கன அடியும், ஏம்சி வாய்க்காலுக்கு 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் கஜா புயலால் அமராவதியின் துணை நதிகளான சண்முகாநதி, குதிரை ஆறு, உப்பாறு போன்ற நதிகளிலும் ஓரளவு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதையடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கரூர் நகருக்கு அதிகாலை 4 மணியளவு வந்த வெள்ள நீர் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு சென்றது. தற்போது இந்த தண்ணீர் திருமுக்கூடலூர் சென்று காவிரியுடன் கலந்து வீணாகக் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அமராவதி ஆற்றின் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கச் செயலர் ராமலிங்கம் கூறுகையில், அமராவதி ஆற்றில் புயல் சின்னம் மற்றும் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழைக் காலங்களில் மட்டுமே அவ்வப்போது தண்ணீர் செல்கிறது. மாறாக வறட்சியான காலங்களில் அமராவதி பாசன விவசாயிகள் கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதியுறுகிறார்கள். வெள்ளக் காலங்களிலும் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரும் வீணாக திருமுக்கூடலூரில் காவிரியுடன் கலந்து கடலில்தான் கலக்கிறது. அமராவதி நீரைச் சேமித்தால் வறட்சி காலங்களில் ஓரளவு குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம். இதற்கு தடுப்பணை ராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்ட வேண்டும் என பலமுறை அரசுக்குத் தெரிவித்து விட்டோம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஆண்டாங்கோவிலில் மட்டும் ஒரு தடுப்பணை கட்டினர். ஆனால் ராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இனியாவது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஆங்காங்கே தடுப்பணை கட்டினால் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் உரிய பலன் கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com