காவிரி படுகையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கள ஆய்வு

கரூர் மாவட்டத்தில் காவிரிப் படுகை பகுதியில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் செவ்வாய்க்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனர்.

கரூர் மாவட்டத்தில் காவிரிப் படுகை பகுதியில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் செவ்வாய்க்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனர்.
காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் காவிரி படுகையில் கள ஆய்வு மேற்கொள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் ம.ப. சின்னத்துரை தலைமையில் சமூக நீதிப் பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளர் ஆர்.ரவிக்குமார், தமிழ்தேசிய பேரியக்கத்தின் கவித்துவன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் திங்கள்கிழமை கல்லணை முதல் திருச்சி, முசிறி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வுசெய்தபின் கரூர் மாவட்டம் மாயனூர் வரை கள ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, 2 ஆவது நாளாக மாயனூரில் செவ்வாய்க்கிழமை காலை கள ஆய்வு தொடங்கிய இக்குழுவினர் வாங்கல், நெரூர், புஞ்சைப்புகழூர் அணைக்கட்டு மற்றும் நொய்யல் ஆறு காவிரியுடன் கலக்கும் பகுதிகள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குழு தலைவர், ம.ப.சின்னத்துரை கூறியது: காவிரிப் படுகையில் கதவணைகள், தடுப்பணைகள், படுகை அணைகள் தேவைப்படும் இடங்களைக் கண்டறியவும், தூர் வாரவேண்டிய ஆற்றுப்பகுதிகள், வாய்க்கால்கள், ஏரிகள், கால்வாய்களைக் கண்டறியவும் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காவிரியில் அண்மையில் விநாடிக்கு இரண்டரை லட்சம் கன அடி நீர் வந்தும், அதனை பாசனத்திற்கோ, ஏரிகளுக்கோ கொண்டு சென்று பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. காவிரிப் படுகையில்  தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த நிலை ஏற்பட்டது. தூர்வார ஒதுக்கிய நிதி என்ன ஆனது? இந்த அவல நிலை தொடரக்கூடாது என்பதற்காகத் தான் காவிரி உரிமை மீட்புக்குழு கள ஆய்வில் இறங்கியுள்ளது. 
குழுக்கள் மூலம் திரட்டப்படும் விவரங்கள் அனைத்தும் நீர்மேலாண்மை மறுசீரமைப்புக்கான விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு அதை நிறைவேற்றித்தருமாறு தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என்றார்.  ஆய்வின்போது காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் விஜயன், ராஜேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com