கரூர் அருகே செல்லிடப்பேசி திருடியதாக சிறுவனை அடித்துக் கொன்ற வழக்கில் 5 பேர் கைது

கரூர் அருகே செல்லிடப்பேசி திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய

கரூர் அருகே செல்லிடப்பேசி திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.    
கரூர் மாவட்டம் ஜெகதாபி அடுத்த அள்ளாளிக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி இளஞ்சியம் (35).  பழனிசாமி கடந்த இரு வருடங்களுக்கு முன் உடல்நிலை சரியின்றி இறந்துவிட்டார். இளஞ்சியம் கூலி  வேலைக்குச் சென்று மகன் பாலசுப்ரமணி(15), மகள் நந்தினி(10) ஆகியோரை வளர்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்ரமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துவந்தநிலையில், தந்தை இறந்ததும், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வெல்டிங் வேலைக்குச் சென்றுவந்துள்ளான். 
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி(45) என்பவரின் தாய் வீட்டில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ரூ.3,000 பணம் திருடுபோயுள்ளது. மேலும் கடந்த 22 ஆம் தேதி (சனிக்கிழமை) அதே பகுதியைச் சேர்ந்த முனியாணி எனும் முனியப்பன்(25) என்பவரது வீட்டில் இருந்த செல்லிடப்பேசி காணாமல் போயுள்ளது. சிறுவன் பாலசுப்ரமணி திருடியிருப்பதாக நினைத்து அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, முனியாணி இருவரும் பாலசுப்ரமணி வீட்டுக்கு சனிக்கிழமை இரவு சென்று இதுகுறித்து கேட்டதற்கு, தான் திருடவில்லை எனக் கூறியுள்ளான். இருப்பினும், சந்தேகமடைந்த பழனிசாமி, முனியாணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி தம்பி மணிவேல்(29), செல்வகுமார்(39), முனியப்பன்(30) ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து பாலசுப்ரமணியை அவரது வீட்டின் முன்பு கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கினர். இதைத்தடுக்க முயன்ற தாய் இளஞ்சியம், தங்கை நந்தினி(10) ஆகியோரை மிரட்டி சமுதாயக் கூடத்துக்கு சென்று தங்குமாறு அனுப்பிவைத்துவிட்டனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இளஞ்சியம், நந்தினி இருவரும் வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்தபோது சிறுவன் பாலசுப்ரமணி வீட்டின் முன்பு இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, இளஞ்சியம் அளித்த புகாரின்பேரில் சிறுவன் பாலசுப்ரமணியைத் தாக்கி கொலை செய்த பழனிசாமி, முனியாணி, செல்வகுமார், பழனிசாமி தம்பி மணிவேல், முனியப்பன் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்து கரூர் குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதிபதி ரகோத்தமன் முன்னிலையில்
ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


சித்ரவதை செய்து மகன் கொலை
இதுதொடர்பாக சிறுவனின் தாய் இளஞ்சியத்திடம் கேட்டதற்கு, எனது மகன் கரூரில் வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்துவந்தான். அவனுக்கு திருட்டு புத்தியெல்லாம் கிடையாது. என் மகனை செல்லிடப்பேசி திருடியதாகக் கருதிய அந்த 5 பேரும் அவனைக் கம்பத்தில் கட்டிவைத்து அவனது முகம், கண்களில் மிளகாய்ப்பொடி தேய்த்தும், கம்புகளால் தாக்கியும் அவனைச் சித்ரவதை செய்து கொன்றிருக்கிறார்கள் என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com