"கரூர் மாவட்டத்துக்கு செய்த வளர்ச்சிப்பணிகளை விவாதிக்கத் தயார்'

கரூர் மாவட்டத்துக்கு நாங்கள் என்னென்ன வளர்ச்சித் திட்டப்பணிகளைச் செய்துள்ளோம் என விவாதிக்கத் தயார்

கரூர் மாவட்டத்துக்கு நாங்கள் என்னென்ன வளர்ச்சித் திட்டப்பணிகளைச் செய்துள்ளோம் என விவாதிக்கத் தயார் என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூர் 80 அடி சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மேலும் பேசியது:  
 இலங்கையில் நடந்த ஈழப்போரில் மூன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அப்போதைய காங்கிரஸ் - திமுக ஆட்சியாளர்களே காரணம். ஆனால் இலங்கை அரசு போர்க்குற்றவாளி என அறிவித்து அந்த அரசை ஐ.நா தண்டிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா.  அதிமுகவில் ஊழல் நடப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். சர்க்காரியா கமிஷன் எடுத்த நடவடிக்கையால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக என்பதை மறந்து அவர் பேசுகிறார். 
கரூர்  மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகள், பசுபதிபாளையம்,பெரியகுளத்துப்பாளையம் குகைவழிப்பாதை பணிகள், இனாம்கரூர் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகிய பணிகள் முடிவுறும்தருவாயில் உள்ளது. கரூருக்கு திமுகவினர் என்ன செய்தார்கள்? என்பதை விவாதிக்கத் தயார். அவர்கள் தயாரா எனக் கூற வேண்டும். திமுக, அமமுக செய்யும் பொய்ப் பிரசாரம் எடுபடாது என்றார். 
கூட்டத்தில், மக்களவை துணை தலைவர் மு.தம்பிதுரை பேசியது: அதிமுகவில் குடும்ப அரசியலுக்கு இடம் கிடையாது. எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா அதிமுகவை வழிநடத்தினார்.  இருவருமே  குடும்ப அரசியல் கொண்டுவரவில்லை. இரட்டை இலை இருக்கும் இடமே உண்மையான அதிமுக என்றார்.  
கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவர் ஏ ஆர் காளியப்பன் தலைமை வகித்தார். 
முன்னதாக கூட்டத்தில் நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் பசுவைசிவசாமி, கரூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் எஸ். திருவிகா, நகர்மன்ற முன்னாள் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் மாவட்டச் செயலாளர் சாகுல்அமீது, பேரவைச் செயலாளர் காமராஜ், இளைஞரணி செயலாளர் விசிகே.ஜெயராஜ், ஒன்றியச் செயலாளர்கள் கமலக்கண்ணன், மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com