4 ஆண்டுகளுக்குப் பிறகு பூலாம்வலசில் சேவல் சண்டை தொடக்கம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சேவல் சண்டை போட்டி வெள்ளிக்கிழமை  தொடங்கியது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சேவல் சண்டை போட்டி வெள்ளிக்கிழமை  தொடங்கியது.
அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசில் மாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கடந்த 120 ஆண்டுகளாக சேவல் சண்டை போட்டி நடந்து வந்தது. 
இந்நிலையில் கடந்த 2014-ல் நடந்த போட்டியின்போது சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி குத்திக் கிழித்ததில் மூவர் இறந்தனர். இதனால் கரூர் மாவட்டத்தில் இந்தப் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதியோடு வெள்ளிக்கிழமை இப்போட்டி தொடங்கியது.  
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் பங்கேற்கக் கூடிய பறவைகளின் உரிமையாளரைத் தவிர வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது.  சூதாட்டம் தொடர்பான எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது என்பன உள்ளிட்ட கடும் கட்டுபாடுகளுடன் போட்டி  தொடங்கியது.
போட்டியில் பங்கேற்க கர்நாடகம், ஆந்திரம், கேரள மாநிலங்களில் இருந்தும், தமிழக மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சண்டை சேவல்களைக் கொண்டு வந்திருந்தனர். முன்னதாக சேவல்களுக்கு மது ஊற்றப்பட்டுள்ளதா என கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பின்னர் சேவலை போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அனுப்பினர். 
போட்டியில் மயில், காகம், வல்லூரு, ஆந்தை, கோழிபூதம் உள்ளிட்ட வகைகளைக் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சண்டை சேவல்களை கொண்டு வந்திருந்தனர். போட்டியைக் காண அரவக்குறிச்சி, பள்ளபட்டி, பூலாம்வலசு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களும், திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல் , ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோரும் வந்திருந்தனர். 
போட்டியை முன்னிட்டு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம். பாஸ்கரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இப்போட்டி வரும் 17-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com