குட்கா பதுக்கிய வழக்கில் உணவகம் மூடல் - மறியல்: 28 பேர் கைது

கரூரில் குட்கா பதுக்கிய வழக்கில் தொடர்புடையவரின் ஹோட்டலை மூட முயன்ற போலீஸாரைத் தடுத்து மறியலில் ஈடுபட்ட ஹோட்டல் ஊழியர்கள் 28 பேரைப்


கரூரில் குட்கா பதுக்கிய வழக்கில் தொடர்புடையவரின் ஹோட்டலை மூட முயன்ற போலீஸாரைத் தடுத்து மறியலில் ஈடுபட்ட ஹோட்டல் ஊழியர்கள் 28 பேரைப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் சோதனைச்சாடியில் நாமக்கல் போலீஸார் கடந்த 14 ஆம் தேதி இரவு வாகனச் சோதனையின்போது, வேனில் குட்கா கடத்தியது தொடர்பாக கரூர் ராயனூர் கேகே.நகரைச் சேர்ந்த செல்வராஜ், தங்கராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 
இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை காலையில் தங்கராஜ் உழவர்சந்தை பகுதியில் நடத்தி வந்த மளிகை கடைக்கு கரூர் நகர போலீஸார் சீல் வைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கரூர் ராயனூர் சன் நகரைச் சேர்ந்த கொங்குமணி என்கிற சுப்ரமணி(47), கரூர் - கோவை சாலையில் நடத்தி வரும் ஹோட்டலை மூடக்கோரி கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், பாரதி, நகர துணை கண்காணிப்பாளர் கும்மராஜா ஆகிய போலீஸார் ஹோட்டலுக்குச் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் ஹோட்டலை மூடக் கோரினர். அதற்கு அவர்கள் இந்த ஹோட்டல் சுப்ரமணியின் தகப்பனாரின் பெயரில் உள்ளது எனக் கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீஸாருக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதனால் ஆத்திரமடைந்த கடை ஊழியர்கள் மற்றும் சுப்ரமணியின் உறவினர்கள் கடை முன்பு கரூர் கோவை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் மறியலில் ஈடுபட்ட 28 பேரையும் கைது செய்தனர். 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கடையைப் போலீஸார் இழுத்து மூடினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com