அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள்: 64 ஆசிரியர்கள் நியமனம்

அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட உள்ளதை

அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட உள்ளதை முன்னிட்டு, அவ்வகுப்புகளில் பாடம் நடத்த கரூர் மாவட்டத்தில் 64  இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 சென்னையில் திங்கள்கிழமை அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கிறார். இந்தப் பணிக்கு இடைநிலை ஆசிரியர்களை மடைமாற்றி ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த வகுப்புகளுக்கு முன்பருவக் கல்வி (கின்டர்கார்டன் மாண்டிசோரி) முடித்த ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கூறி வருகின்றனர். மேலும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கடந்த 18 ஆம் தேதி முதல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தை, அரசு கவனத்தில் கொள்ளாவிட்டால் ஜாக்டோ - ஜியோ சார்பில் வரும் 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். 
இதனிடையே அந்தந்த மாவட்டங்களில் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் 18 ஆம் தேதிக்குள் வேலையில் சேராவிட்டால் அவர்களது ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.  
இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:  கரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு 64 இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளிகளில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் நடத்த நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் மட்டும் பணியில் இணைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் ஜாக்டோ - ஜியோ அமைப்புகளுடன் இணைந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
மேலும் செவ்வாய்க்கிழமை (22 ஆம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com