போக்குவரத்துக்கு இடையூறாக மின் கம்பங்கள்

பெரம்பலூர் - ஆத்தூர் சாலையின் மையப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்

பெரம்பலூர் - ஆத்தூர் சாலையின் மையப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களையும், மின்மாற்றிகளையும் அகற்ற வேண்டுமென வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்- ஆத்தூர் சாலையை, தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டு அதற்கான சாலை விரிவாக்கப் பணிகள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதல்கட்டமாக குறுகிய சாலைப் பகுதிகளில் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, சாலை பாதுகாப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் பெரம்பலூர்- ஆத்தூர் செல்லும் சாலையில் ரூ. 45 லட்சத்தில் சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு தார்ச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், சாலையோரத்தில் இருக்கும் 6 மின் கம்பங்கள், ஒரு மின்மாற்றி ஆகியவற்றை அகற்றாமலேயே நெடுஞ்சாலை துறையினர் தார்ச் சாலை அமைக்கும் பணியை முடித்துள்ளனர். 
இதனால், தார்ச் சாலையின் மையப் பகுதிகளிலேயே மின் கம்பங்களும், மின் மாற்றியும் உள்ளதால், சாலை அமைத்தும் போக்குவரத்துக்கு பயனற்று கிடக்கிறது. அதிக விபத்துகள் நிகழ்ந்து வரும் இப்பகுதியில், சாலைப் பணி முடிவுற்று சுமார் ஒரு மாதத்துக்கு மேலாகியும், இதுவரை மின் கம்பங்களையும், மின்மாற்றியையும் அகற்றவில்லை. 
இந்த தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாததால், சாலை முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவுகளில் செல்லும் வாகன ஓட்டிகள் வேகமாக சென்று மின் கம்பங்கள் இருப்பது தெரியாமல் அதன்மீது மோதி அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. 
எனவே, உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன் சாலையின் மையப் பகுதியில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றியை அகற்ற மின் வாரியத் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com