தடையை மீறி ஊர்வலம் நடத்த முயன்ற 40 பேர் கைது:  தடியடியில் 20 பேர் காயம்

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயன்ற ஒரு சமூகத்தைச் சேர்ந்த

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயன்ற ஒரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மீது போலீஸார் திங்கள்கிழமை தடியடி நடத்தியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, 40-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். 
    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சதுர்த்தியின்போது, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீரில் கரைப்பது வழக்கமாம். நிகழாண்டிலும், சதுர்த்தியின்போது விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடிவெடுத்து, அதற்கான முன்னேற்பாடுகளை பணிகளை மேற்கொண்டனர். 
இதனிடையே, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அந்த வழித்தடத்தில் ஊர்வலம் செல்ல அனுமதி மறுத்தனர். இதுதொடர்பாக, கடந்த 12 ஆம் தேதி ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கடந்த 14 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, போலீஸார் அறிவுறுத்திய வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்லவும், மீறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன். 
இந்நிலையில், போலீஸாரின் தடையை மீறி ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பாதையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்ததுவதற்கு சம்பந்தப்பட்ட சமூகத்தினர் திங்கள்கிழமை முயற்சி மேற்கொண்டனர். தகவலறிந்த துணை கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, ஊர்வலத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். 
இருப்பினும், போலீலாரின் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயற்சித்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, பொதுமக்களை கலைந்துசெல்ல போலீஸார் எச்சரித்தனர். ஆனால், ஊர்வலம் செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில், பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
மேலும், சுமார் 40-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இதனால், பாடாலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படவிருந்த விநாயகர் சிலையை மீட்ட போலீஸார், திருச்சி காவிரிக்கு கொண்டுசென்று நீரில் கரைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com