கடத்தப்பட்ட கணவரை மீட்டுத்தரக்கோரி இளம்பெண் ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கூலிப்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட கணவரை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கூலிப்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட கணவரை மீட்டுத் தரக்கோரி, இளம்பெண் அவரது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், திருவாலந்துறை அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த அனிதா (21) அளித்த மனுவில் தெரிவித்துள்ளது: வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் முத்துராஜாவை (21), கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தேன். இந்நிலையில், கடந்த மாதம் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் சென்று தங்கினோம். செப். 13 -இல் முத்துராஜா குடும்பத்தினரின் ஆட்கள் திருப்பூர் வந்து என்னையும், முத்துராஜாவையும் மிரட்டி ஊருக்கு அழைத்து வந்தனர்.  
வரும் வழியில் முத்துராஜாவின் கல்விச் சான்றுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் பறித்துக்கொண்டு, வி.களத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முத்துராஜா என்னை திருமணம் செய்துகொள்ள உறுதியாக இருந்ததால், அவரது வீட்டார் முத்துராஜாவை கைவிட்டு சென்றுவிட்டனர். 
வி.களத்தூர் போலீஸார் முன்னிலையில், செப். 16 ஆம் தேதி திருவாலந்துறை கோயிலில் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. செப். 17 -இல் வாலிகண்டபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்ய வந்தபோது, பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் இல்லாததால் பதிவு செய்ய இயலவில்லை. இதையடுத்து, கிராமத்துக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது, வி.களத்தூர் கல்லாறு அருகே கூலிப்படை கும்பல் ஒன்று கத்தியைக் காட்டி மிரட்டி எனது கணவர் முத்துராஜாவை கடத்திச் சென்றுவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com