கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்: ரூ. 48 லட்சம் இலக்கு

நிகழாண்டு கோ - ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை ரூ.48 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

நிகழாண்டு கோ - ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை ரூ.48 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
பெரம்பலூர் கடைவீதி பகுதியில் உள்ள கோ- ஆப் டெக்ஸில், நிகழாண்டுக்கான தீபாவளி சிறப்பு விற்பனையை வியாழக்கிழமை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது: 
தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள கோ- ஆப்  டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக கடந்த 2017-18 ஆம் ஆண்டு ரூ. 1,100 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு 2018- 19 ரூ. 1,300 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை ரூ. 35.86 லட்சம் மதிப்பில் நடைபெற்றது. தற்போது, ரூ. 48 லட்சம் மதிப்பிலான ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் கனவு- நனவு திட்டம் என்ற சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12- வது மாத சந்தா தொகையை கோ- ஆப் டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீத சிறப்பு தள்ளுபடியுடன் வழங்குகிறது. 
பெரம்பலூர் கோ-ஆப் டெக்ஸில், நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மென்பட்டு சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சாவூர், திருபுவனம் பட்டு சேலைகளும், கோவை கோரா காட்டன் சேலைகளும் விற்பனைக்கு உள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, பருத்தி ஆடைகள் மற்றும் மாப்பிள்ளை செட், ஏற்றுமதி ரகங்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையின்போது, தமிழக அரசு வழங்கும் 30 சதவீதத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர் சாந்தா. 
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் த. விஸ்வநாதன், கோ- ஆப் டெக்ஸ் மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) இரா. சீனிவாசன், ரக மேலாளர் திரு.இரா. வெங்கடாஜலபதி, விற்பனை நிலைய மேலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com