தங்குதடையின்றி புழக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பொருள்கள்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கு தடையின்றி

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கு தடையின்றி புழக்கத்தில் உள்ளது. இதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாகக் கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
தமிழக அரசு மறு சுழற்சி செய்ய இயலாத கேரி பேக் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு ஜன. 1 முதல் தடைவிதித்தது. இதையடுத்து, வணிகர்கள் மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்நிலையில், அரசின் உத்தரவை அமல்படுத்துவதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போதிய ஈடுபாடு காட்டாததால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மீண்டும் தடையின்றி புழக்கத்துக்கு வரத்தொடங்கிவிட்டன. 
பெரம்பலூர் நகரில் உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், கடைவீதி, என்.எஸ்.பி ரோடு, புறநகர் பேருந்து நிலையம் என நகரின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் கேரி பேக், தண்ணீர் பாக்கெட், பாலித்தீன் பை, தடை செய்யப்பட்ட நான்-ஓவன் பை, பிளாஸ்டிக் ஸ்பூன் உள்ளிட்ட மறு சுழற்சி செய்ய இயலாத மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் புழக்கத்தில் இருப்பதைக் காணமுடிந்தது. மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.  இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஜி. ரமேஷ் கூறியது:
நகராட்சி நிர்வாகம், உணவுப் பாதுகாப்புத் துறை, உள்ளாட்சித் துறை, மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை என பல்வேறு துறையினர் மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில் பொறுப்பு உள்ளது.  ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் ஈடுபாட்டுடன் செய்வதில்லை. இதனால் தான் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தங்குதடையின்றி பயன்பாட்டில் உள்ளது. 
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை புழக்கத்தில் விடும் நபர்கள் மீது பாரபட்சமின்றி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
வியாபாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. பொதுமக்களும் கடைகளுக்கு வரும்போது மாற்றுப் பைகளை கொண்டுவருவதில்லை. இதனால், வேறு வழியின்றி தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் படிப்படியாக பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும் என்றார் பெரம்பலூரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com