இரு தரப்பினரிடையே மோதல்: 13 பேர் கைது

பெரம்பலூர் அருகே முன் விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில்,


பெரம்பலூர் அருகே முன் விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில், 8 பேர் காயமடைந்தனர். 13 பேரைப் போலீஸார் கைது செய்தனர். 
பெரம்பலூர் அருகேயுள்ள களரம்பட்டி கிராமத்தில் உள்ள இரு பிரிவினரிடையே முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவ்வப்போது அவர்களிடையே மோதல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட தகராறில் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில், காயமடைந்த இரு பிரிவைச் சேர்ந்த 8 பேரும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தகவலறிந்த போலீஸார் அங்குசென்று, பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். 
இதுதொடர்பாக, ஒரு பிரிவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கலையரசன் (25), மற்றொரு பிரிவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் விஜயகுமார் (39) ஆகியோர் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, இரு பிரிவைச் சேர்ந்த சதீஸ்குமார் (27), சிலம்பரசன் (30), கங்காதரன் (34), ரமேஷ் (23), மதன் (23), அரவிந்த் (26), திருமுருகன் (24), கவியரசன் (24) உள்பட 13 பேரைக் கைது செய்தனர். பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 
சாலை மறியல்: 
இந்நிலையில், பிரச்னைக்குரிய உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, ஒரு பிரிவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் - துறையூர் சாலையில், மாட்டு வண்டியை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். 
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால், பெரம்பலூர் - துறையூர் பிரதான சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com