அரோகரா கோஷத்துடன் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் உள்ள முருகர் கோயில்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் உள்ள முருகர் கோயில்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 
மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற விராலிமலை சுப்பிரமணியர் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை, மூலவருக்கு உச்சிகால பூஜை, தீபாராதனை, சப்பரத்தில் சுப்பிரமணியர் யாகசாலையில் இருந்து எழுந்தருளல், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் இதர கால வேளை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜையும், யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது.
இதன்பின், மாலை 5.20 மணிக்கு ஆபரண மண்டபத்திலிருந்து சுப்பிரமணியர் சுவாமி வாத்தியங்கள் முழங்க சஷ்டி மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, சூரபத்மனை வதம் செய்வதற்காக போர்க்கோலம் பூண்டு சஷ்டி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மலையை சுற்றி வந்து கோயில் அடிவாரத்தில் சூரசம்ஹாரம் தொடங்கியது. முதலில், கஜ முகத்துடன் வந்து சுவாமியை மூன்று முறை வலம் வந்து போரிட்ட சூரபத்மனை, சுப்பிரமணியர் வதம் செய்தார்.
இரண்டாவதாக இலை புற்கள் கலந்த முகத்துடன் வந்த சூரனையும், அதன்பின், மாமரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்டார் சுப்பிரமணியர். 
அப்போது, பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்பினர். 
புதுக்கோட்டை மட்டுமல்லாது அருகாமையில் உள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர்.
தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் சுவாமி எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கண்ணன், ரெ. மாரிமுத்து மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள குமரமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினந்தோறும் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று திருநீறு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பிற்பகலில் சந்தனக்காப்பு வெள்ளி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அதேபோல, புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
அறந்தாங்கி: அறந்தாங்கி அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் திரளான மக்கள் பங்கேற்று வழிபட்டனர். 
அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை (நவ.8) யாகசாலை பூஜையுடன்  துவங்கியது. தினந்தோறும் முருகப்பெருமானுக்கு பல்வேறு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. 
முக்கிய நிகழ்வான,  சூரசம்ஹாரம் ரயில்வேகேட்  முனீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்றது.  சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். புதன்கிழமை (நவ.14) மாலை பாலசுப்பிரமணியர் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. 
அதேபோல, அறந்தாங்கி கோட்டை ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
பொன்னமராவதி: பொன்னமராவதி வலையபட்டி மலையாண்டி கோயிலில் சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நவ.8ஆம் தேதி தொடங்கிய கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் தொடக்கமாக கோயிலை வலம் வந்த மலையாண்டி சுவாமி சூரனை வதம் செய்தார். 
சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com