அறந்தாங்கி - கட்டுமாவடி சாலையில் மறியல்

புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறாததைக் கண்டித்து,  அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு கிராம

புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறாததைக் கண்டித்து,  அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு கிராம மக்கள் திங்கள்கிழமை  அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த 16 ஆம் தேதி வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட  அறந்தாங்கி அருகே சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே  கடந்த  2 நாட்களாக  சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.  அறந்தாங்கி அருகே  ராஜேந்திரபுரம், எருக்கலக்கோட்டை, ஆவணத்தான்கோட்டை, மறமடக்கி உள்ளிட்ட கிராமங்களில் இதுவரையில் எந்த நிவாரணப் பணிகளும் நடைபெறவில்லை. மேலும், மின்விநியோகம் இல்லாத காரணத்தால் உணவு, குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்படுவதாகக் கூறி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுதவிர, பல இடங்களில் அதிகாரிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்வார்கள் எனக் கருதி வீடுகள், வயல்கள் மற்றும் சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தாமல் இருப்பதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கிராமங்களில் மா, பலா, தென்னை உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்து கிடப்பதால் வாழ்வாதாரம் கருகிவிட்டதாக பல இடங்களில் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர். 
மேலும்  அரசு அதிகாரிகள் உடனடியாக தங்கள் பகுதிக்கு வந்து  நிவாரணப் பணிகளில் ஈடுபடவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு கிராமத்தில் மேற்குறிப்பிட்ட நிவாரணப் பணிகள் நடைபெறாததால், அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அறந்தாங்கி வட்டாட்சியர் க.கருப்பையா, காவல் ஆய்வாளர் சி. பாலமுருகன் ஆகியோர் பேச்சு நடத்தியதில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் ஏற்றி குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்துதருவதாக உறுதி அளித்தனர். 
இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 
இதேபோல் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டதால் பட்டுக்கோட்டை, மறமடக்கி, சிலட்டூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கஜா புயல் நிவாரணப் பணிகள் இன்னமும் கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்படாத காரணத்தால் கிராம மக்கள் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்.  
ஆகவே, மாவட்ட நிர்வாகம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைத்து  நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com