இயல்பு நிலையை நோக்கி அறந்தாங்கி

கஜா புயலால் பாதிப்புக்குள்ளான அறந்தாங்கியின் நகர்ப் பகுதியில் ஆங்காங்கே மின் விநியோகம் சீராகி வருகிறது.

கஜா புயலால் பாதிப்புக்குள்ளான அறந்தாங்கியின் நகர்ப் பகுதியில் ஆங்காங்கே மின் விநியோகம் சீராகி வருகிறது. பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் சீரமைக்கப்படவில்லை. 
          கடந்த 16 ஆம் தேதி வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட அறந்தாங்கி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நகராட்சி சார்பில் ஜெனரேட்டர் உதவியுடன் குடிநீரேற்று நிலையங்களில் குடிநீர் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு குறைந்த அளவில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. மேலும், புதுக்கோட்டை, அறந்தாங்கி ரோட்டரி கிளப் மற்றும் போர்ட் சிட்டி ரோட்டரி கிளப், ஆலங்குடி ரோட்டரி கிளப்  ஆகியவை திருச்சியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட 12 ஆயிரம் லிட்டர் குடிநீர் வாகனங்களைக் கொண்டு வந்து  புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய இடங்களில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. 
சீரமைப்பு பணியில் தவ்ஹூத் ஜமா அத் தொண்டர்கள்:
அறந்தாங்கி நகரில் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை நகராட்சி பணியாளர்கள் ஒருபுறமும், தமிழ்நாடு தவ்ஹூத் ஜமா அத் தொண்டர்கள் மறுபுறமும் என மரங்களை அறுத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 
வெளி மாவட்டங்களில் இருந்து மின் பணியாளர்கள்:
சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த மின் பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக மின் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். போதிய தங்குமிடம், தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். சீரமைப்பு பணியின்போது திங்கள்கிழமை அவ்வப்போது மழை பெய்து வந்ததால்,  அவர்களின் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. மேலும் போதிய மின் சாதனங்கள், கம்பிகள் வந்து சேரவில்லை என அவர்கள் தெரிவித்தனர். 
கிராமங்களில் மக்கள் மறியல்: கஜா புயல் வீசி 3 நாட்களாகியும் அறந்தாங்கி நகர்ப் பகுதியே இன்னமும் சீரமைக்கப்படவில்லை. கிராமப் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை செய்துதரக்கோரி ஆங்காங்கே மறியல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
 செல்பேசி விற்பனையகங்களில் இலவசமாக வாடிக்கையாளர்கள் செல்போன் மின்னூட்டம்(சார்ஜ்) பெற்றுச் செல்வதால் அங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்படுகிறது.       
விரைவில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலாக இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com