23 செப்டம்பர் 2018

புதுகையில் அரசுப் பொருட்காட்சி தொடக்கம்

DIN | Published: 12th September 2018 07:45 AM

புதுக்கோட்டையில் அரசுப் பொருட்காட்சியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர்  திங்கள்கிழமை மாலை திறந்து வைத்தனர்.
புதுகை அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் தமிழக அரசின் செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பில் பொருட்காட்சியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர்  திறந்து வைத்தனர். விழாவில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  பேசியது:
மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்டங்கள் தோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்முறையாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி தொடங்கி  வைக்கப்பட்டுள்ளது. இதில்,  30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இனிவரும் ஆண்டுகளில் அரசுப் பொருட்காட்சியைத் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா காலங்களில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  புதுகையில் பிறந்து தமிழகத்தின் முதல் திரைப்பட கதாநாயகனாக திகழ்ந்த  பி.யு.சின்னப்பாவிற்கு மணிமண்டபம்  அமைக்க மாவட்ட மக்கள் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு கோரிக்கை வைக்கிறேன்.
தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியது:
புதுகையில் முதன்முதலாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சி திங்கள்கிழமை (செப். 10) முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை நடைபெறும். அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, நடிகர் பியு.சின்னப்பாவிற்கு மணிமண்டபம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், தமிழ்நாடு  வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

More from the section

பகிரப்படாத பிரச்னைகள் மன உளைச்சலை அதிகரிக்கும்
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் பிரசார இயக்கம்
மணல் கடத்திய 2 மாட்டுவண்டிகள், டிப்பர் லாரி பறிமுதல்
அறந்தாங்கி அருகே பைக்கில் சென்றவர் லாரி மோதி சாவு
பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம்