பகிரப்படாத பிரச்னைகள் மன உளைச்சலை அதிகரிக்கும்

பிரச்னைகளை நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் உள்ளடக்கினால் மன உளைச்சல் அதிகரிக்கும் என்றார் மாவட்ட மனநல திட்ட


பிரச்னைகளை நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் உள்ளடக்கினால் மன உளைச்சல் அதிகரிக்கும் என்றார் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் ஆர். கார்த்திக் தெய்வநாயகம்.
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பகத்தின் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் சார்பில் மன்னர் அரசு கல்லூரியில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வோருக்கான இலவச பயிற்சி வகுப்பில் சனிக்கிழமை மன உளைச்சலை கையாளுவது தொடர்பாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஆர். கார்த்திக் தெய்வநாயகம் மேலும் பேசியது:
மன உளைச்சல் ஆதிகாலத்தில் இருந்தே உள்ளது. மன உளைச்சலால் தலைவலி, உடல் வலி, படபடப்பு, கைகால் நடுக்கம், தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல், பசியின்மை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மன உளைச்சலை கையாளத் தெரியாமல் இருந்தால் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாவதோடு வீண் சண்டையிட்டுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். நாம் மட்டுமே கஷ்டப்படுகிறோம் என எண்ணுவதை முதலில் கைவிட்டாலே இதன் தாக்கம் குறைந்துவிடும்.
பிரச்னைக்கு தன்னையே குற்றப்படுத்திக் கொள்வதால்தான் மன உளைச்சல் ஏற்படுகிறது. ஆனால், உயிரியல், உளவியல் மற்றும் சமூகவியல் ஆகிய மூன்று காரணிகளுமே காரணமாகும்.
எனவே, பிரச்னைகள் குறித்து நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மனநல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
சுய ஒழுக்கம், குறைந்தது நாளொன்றுக்கு 8 மணி நேர தூக்கம், தரமான உணவு, உடல் பயிற்சி இருந்தாலே பிரச்னைகளை ஓரளவு கட்டுப்படுத்தி விடலாம்.
மறதி என்பது கவனக்குறைவுதானே தவிர நோய் கிடையாது. மாணவர்கள் பல்வேறு திறன்களைப் பயன்படுத்தி, குழுவாக விவாதித்து கற்றாலே மனஉளைச்சல் பிரச்னையை தீர்க்கலாம்.
சுமார் 60 சதவீதம் பேருக்கு மனநல பிரச்சினை ஏற்படுகிறது. ஆனால், ஒரு சதவீதம் பேருக்குதான் மனநோய் ஏற்படுகிறது. மனநல பிரச்சினைக்கு மாத்திரை அவசியம் இல்லை. ஆனால், மனநோய்க்கு மாத்திரை அவசியம்.
புதுக்கோட்டையில் முத்துலெட்சுமி ரெட்டி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட மனநல திட்ட அலுவலகம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதற்கான ஆலோசனை பெறலாம்.
கூடுதல் விவரங்களை 94941-21297 எண்ணிலும் ஆலோசனை பெறலாம் என்றார் அவர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மன உளைச்சலில் இருந்து விடுபடுவதற்கான செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com