மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை விடுவிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை திரும்ப விடுவிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை திரும்ப விடுவிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்திமங்கலம் பகுதியை சேர்ந்த என்.கே.பாண்டியராமன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அவரது மனு:
 இடையாத்திமங்கலம் கிராமத்தில் வெள்ளாறு ஆறு உள்ளது. இந்த ஆற்று நீரை நம்பி இப்பகுதியில் விவசாய பணிகள் நடக்கின்றன. வெள்ளாறு ஆற்றுப்படுகை அருகே தமிழக அரசு மணல் குவாரி அமைக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. குவாரி அமையுமிடத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மேம்பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்படும். குவாரி அமைந்தால் 2 கி.மீ. தொலைவில் உள்ள கடல் நீர் ஆறுடன் கலக்க வாய்ப்புள்ளது. எனவே, இடையாத்திமங்கலம் வெள்ளாற்றுப் படுகையில் மணல் குவாரி அமைக்கும் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, வெள்ளாற்று படுகையில் மணல் குவாரி அமைக்கும் பணிகளில் தற்போதைய நிலை தொடர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
 தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தப்படுகிறது. அனுமதியின்றி இரவு, பகலாக மணல் திருட்டு நடைபெறுவதால் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. 2050 ஆம் ஆண்டில் சென்னை உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்துவிடும். இதனால் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவர் என நீதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது. தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் வகையில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் அபராதத் தொகையைப் பெற்றுக்கொண்டு விடுவிக்கப்படுகிறது. இந்த நடைமுறையால் மணல் திருட்டு குறையவில்லை.
 இதைக் கருத்தில் கொண்டு மணல் திருட்டு தொடர்பான இந்த வழக்கில் தமிழக உள்துறைச் செயலரை நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கிறது. மேலும், மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை ஆட்சியர்கள் விடுவிக்கக் கூடாது. 
மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டால், மாடுகளை விடுவித்துவிட்டு வாகனங்களை சிறைபிடிக்கலாம். மணல் திருட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்கக்கோரும் வழக்குகளில் நீதிமன்றம் ஆர்வம் காட்டக்கூடாது. இந்த உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பின்பற்ற உள்துறைச் செயலர் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டு விசாரணையை அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com