ஆசிரியர்கள் நிறைய வாசிக்க வேண்டும்

எதிர்காலத் தலைமுறையை உருவாக்கப் போகும் ஆசிரியர்கள் நிறைய வாசிக்க வேண்டும்; அப்போதுதான் மாணவர்கள் எழுப்பும் அனைத்து வகையான


எதிர்காலத் தலைமுறையை உருவாக்கப் போகும் ஆசிரியர்கள் நிறைய வாசிக்க வேண்டும்; அப்போதுதான் மாணவர்கள் எழுப்பும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதில்களைத் தர முடியும் என்றார் புதுக்கோட்டை வாசகர் பேரவையின் செயலர் சா. விஸ்வநாதன்.
புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக புத்தக நாள் சிறப்புச் சொற்பொழிவில் அவர் மேலும் பேசியது:
21ஆம்  நூற்றாண்டில் அனைத்து விஷயங்களையும் ஆ சிரியர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். காரணம் ஆசிரியர்கள்தான் அடுத்த தலைமுறையை உருவாக்கப் போகிறீர்கள். அவ்வாறு அனைத்து விஷயங்களையும் தெரிந்திருக்க வேண்டுமானால், ஆசிரியர்கள் நிறைய படிக்க வேண்டும். மாணவர்களின் கேள்விகள் அனைத்துக்கும் உங்களிடம் பதில் இருக்க வேண்டும்.
புத்தக வாசிப்புதான் அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதிலைத் தரும். சாதாரண மனிதரையும் அறிவில் மேம்பட்டவராகவும் படைப்பாளியாகவும் உருவாக்குவது வாசிப்புதான்.
3ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்த சிவஞானம் பிற்காலத்தில் சிலம்புச்செல்வராக உருவாகுவதற்கு அவரது வாசிப்புதான் காரணமாக இருந்தது. 
வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் இன்றியமையாததாக மாற்றும் பணியை வாசிப்பு செய்யும். வாழும் முறையையும் அனுபவத்தையும் நமக்குக் கொடுப்பவை புத்தகங்களே. நம்முடைய கலாசாரத்தை வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பணியைப் புத்தகங்கள் செய்கின்றன.
ஸ்பெயின் நாட்டின் எழுத்தாளர் மிகெல் தெடி செர்வன்டேஸ் மறைந்த நாள் ஏப். 23. அவரது மறைவை அந்த நாட்டின் புத்தக விற்பனையாளர்கள், படைப்பாளர்கள் இணைந்து புத்தக நாளாகக் கொண்டாடினர். அந்த நாளில் ஸ்பெயின் நாட்டின் காதலர்கள் தங்களது இணையர்களுக்கு ரோஜாவைத் தருவதற்குப் பதிலாக புத்தகத்தைக் கொடுத்தனர்.
அதேபோல, வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியரின் மறைந்த நாளும் ஏப். 23 தான். இதன் தொடர்ச்சியில் கடந்த 1995ஆம் ஆண்டு முதல் ஏப். 23ஆம் தேதியை உலக புத்தக நாளாக கொண்டாடிட யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டது.
தினமணியின் ஆசிரியராக இருந்த ஏ.என். சிவராமன், தனது காலத்தில் விவசாயம், பொருளாதாரம், அரசியல், அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் எழுதியதற்குக் காரணம் அவரது தீவிர வாசிப்புதான். படிப்பை விட்டாலும் படிப்பதை விடாதே என்று அவரது பள்ளித் தலைமை ஆசிரியர் குறிப்பிட்டதை ஏ.என். சிவராமன் பதிவு செய்துள்ளார் என்றார் விஸ்வநாதன். 
சொற்பொழிவுக்கு கல்லூரியின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் கேஆர் குணசேகரன், அறங்காவலர்கள் கே. ரெங்கசாமி,  அ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கல்லூரியின் துணை முதல்வர் சுப. தாரகேஸ்வரி வரவேற்றார். உதவி பேராசிரியை கே. தர்மபாலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com