இறவாப் புகழுடைய நல்நூல்களை மக்களிடம் கொண்டு செல்வது அவசியம்: ஸ்டாலின் குணசேகரன்

இறவாப் புகழுடைய நல்நூல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியது புத்தகத் திருவிழாக்களின் அவசியப் பணி


இறவாப் புகழுடைய நல்நூல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியது புத்தகத் திருவிழாக்களின் அவசியப் பணி என்றார் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன்.
புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை மாலை இறவாப் புகழுடைய  நல்நூல்கள் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது :
காரல் மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து கொண்டு வந்த நூல், உலகின் அரசியல் மாற்றத்தை முன்வைத்த நூல் தான் மூலதனம். லத்தீன் மொழியில் எழுதுவதுதான் அறிவியல் கண்டுபிடிப்பாக அறிந்து கொள்ளப்படும் காலத்தில் இத்தாலிய மொழியில் கலிலியோ எழுதிய நூல் நட்சத்திர தூதுவன். தாமஸ் பெய்ன் எழுதிய காமன்சென்ஸ் (பகுத்தறிவு) நூல் வெறும் 43 பக்கங்களைக் கொண்டது. ஹென்றி டேவிட் எழுதிய சிவில் டிஸ்ஒபீடியன்ஸ் (சட்ட மறுப்பு) நூலும் மிகச்சிறிய நூல்தான்.
அங்கிள் டான் ஸ்டாமிங் எழுதிய நூலை அச்சிடுவதற்காக 8 காகித ஆலைகள் இருந்தனவாம்.  5 அச்சகங்கள் நூலை அச்சிட்டுக் கொண்டே இருந்தனவாம். கோப்பர்நிக்கஸ் தனது 70ஆம் வயதில் நூல் எழுதினார்.
இவ்வாறு மிகச்சிறு வயது, அதிக வயது, மிகச் சிறு பக்கங்களில், பெரிய அளவிலான நூல் என இறவாப் புகழுடைய நூல்களை மக்கள் மத்தியில் கொண்டு செலல்ல வேண்டும். 455 ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படும் நிலையில் உள்ள கலிலியோ போன்ற அறிஞர்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல நூல்கள்தான் வழிகாட்டும்.
ஏறத்தாழ 6 ஆண்டுகளில் நான் எழுதிய விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற நூல் தற்போது இந்தியில் தயாராகியுள்ளது. ஆங்கிலத்திலும் நூலை பெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பேனா அப்புசாமி என்ற வழக்குரைஞர் முதலில் தமிழ்நாட்டில் தமிழில் உலக அறிவியலாளர்களை அறிமுகப்படுத்தியவர். 25 நூல்களை அவரே எழுதியிருக்கிறார். 5 ஆயிரம் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதில் 3 ஆயிரம் கட்டுரைகள்  அறிவியல் கட்டுரைகள்.
இவ்வாறாக இறவாப் புகழுடைய நல்நூல்கள் தமிழ் எழுத்துலகில் வந்திருக்கின்றன. அவர்கள் அவ்வளவாக அறியப்படாதவர்களாக இருந்தாலும், நூல்கள் இறவாப் புகழுடையவை என்றார் அவர். 
முன்னதாக அறியப்படாத நாடக ஆளுமைகள் என்ற தலைப்பில் நாடகவியலாளர் கி. பார்த்திபராஜா பேசியது:அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார் பியு. சின்னப்பா புதுக்கோட்டையில் பிறந்தவர். ஷேக்ஸ்பியருக்கு இணையாக கொண்டாடப்பட்டவர் சங்கரதாஸ் சுவாமிகள், தூத்துக்குடி விளாத்திக்குளத்தில் பிறந்தவர்.
விடுதலைப் போராட்டத்தில் நாடகங்கள் மூலம் எழுச்சியை ஏற்படுத்தியவர் விஸ்வநாத தாஸ். அவரைப் போலவே ஆர்மோனிய கலைஞர் டி.எம். காதர்பாட்சா, சிறையில் இருந்து தூக்கிலிருந்தும் தப்பியவர். 
எம்ஆர் ராதாவை எப்படி மறக்க முடியாதோ அதைப் போலவே, மணிமுத்து பாகவதரையும் நாடக உலகில் மறக்க முடியாதவர். இப்படியான அறியப்படாத  நாடக ஆளுமைகளையும் கூட நாம் மக்கள்  மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com