பரியேறும் பெருமாள் படத்துக்கு விருது வழங்கல்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து படத்தின்


புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து படத்தின் உதவி இயக்குநர்கள் அரவிந்த், பிரபுநாத் ஆகியோருக்கு சனிக்கிழமை மாலை விருது அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9ஆம் நாளான சனிக்கிழமை மாலை ஊடகம் - நிஜமும் நிழலும் என்ற தலைப்பில் ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வன் பேசியது:
தனது பேத்திகளுக்கும் கொள்ளுப் பேத்திகளுக்கும் பாட்டி சொல்லிக் கொடுத்த கதைகள், அவர்களுக்கு கடத்தப்பட்டு நவீன கதைகளாக உருவெடுக்கிறது. அதைத் தொடர்ந்து செய்வது கற்பனைத் திறனை அதிகரிக்கும்.
ஊடகங்கள் எப்போதும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்க வேண்டும். அரசியல் சாசனத்தில் தனிமனிதனுக்குத் பேச்சு சுதந்திர, எழுத்துச் சுதந்திர உரிமைகள் அப்படியே ஊடகங்களுக்கும் பொருந்தும். தனிப்பட்ட சிறப்பு உரிமைகள் எதுவும் இல்லை.
அதேபோல, ஊடகங்கள் எப்போதும் தீர்ப்பெழுத முடியாது. அதை மக்கள்தான் செய்ய வேண்டும். தவறுகளை முன்வைப்பது மட்டும்தான் செயல்பட முடியும். 
வதந்திகளை சமாளிப்பதுதான் தற்போது தமிழ் மண்ணில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கலாகக் கருதுகிறேன். பிடிக்காதவர்களைக் கடுமையாக - தனிப்பட்ட முறையில், அவதூறாகத் தாக்கி சமூக ஊடகங்களில் பரப்புவது அதிகரித்திருக்கிறது என்றார் அவர்.
குழந்தைகளின் கதை உலகம் என்ற தலைப்பில் எழுத்தாளர் மு. முருகேஷ் பேசியது:
பெற்றோர்கள் குழந்தைகளைப் பேசவும், கதை சொல்லவும் பழக்க வேண்டும். என்ன வயதாக இருந்தாலும் நம்முடைய குழந்தைகளுக்கு கதை சொல்வதை பெற்றோர்கள் தொடர வேண்டும்.
கேட்கப்படும் கதைகள்தான் குழந்தைகளின் மன உலகை வெளியே எடுத்து வரச் செய்யும். எனவே, கதை சொல்வதையும், கதை கேட்பதையும் ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர். 
சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்ட பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கான விருதினை அப்படத்தின் உதவி இயக்குநர்கள் அரவிந்த், பிரபுநாத் ஆகியோருக்கு ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வன், எழுத்தாளர் மு. முருகேஷ் ஆகியோர் வழங்கினர். 
நிகழ்ச்சிக்கு முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் தலைமை வகித்தார். மா. குமரேசன் வரவேற்றார். கவிஞர் ஜீவி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். புதுகைப்புதல்வன் நன்றி கூறினார்.
இன்றுடன் புத்தக திருவிழா நிறைவு
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கடந்த பிப். 15ஆம் தேதி தொடங்கப்பட்ட 3 ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 24) நிறைவடைகிறது. நிறைவு விழாவில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு 10 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறும்.
நல்வாசகர் விருது: 10 நாட்களிலும் அதிக புத்தகங்களை வாங்கிய மாணவர், தனி நபர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு என மூன்று சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com