கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்டபுதுகை புத்தகத் திருவிழா பிப். 15-இல் தொடக்கம்

கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நகர்மன்ற வளாகத்தில் பிப்.15 ஆம் தேதி


கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நகர்மன்ற வளாகத்தில் பிப்.15 ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மூன்றாவது ஆண்டாக இப்புத்தகத் திருவிழா நடத்தப்பட உள்ளது. 2018, நவ.24 முதல் டிச.3 ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது பிப்.15 முதல் 24 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் முன்னணி புத்தக நிறுவனங்கள் 40 அரங்குகளில் தங்களது புத்தகங்களைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கின்றன. 
மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், ஆட்சியர் சு. கணேஷ், மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் ஆகியோர் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
தினமும் மாலை நடைபெறவுள்ள இலக்கியச் சொற்பொழிவில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், சு. வெங்கடேசன் மற்றும் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, மரபின்மைந்தன் முத்தையா, கவிஞர் இரா. எட்வின், கவிஞர் மு. முருகேஷ், ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வன், நாடகவியலாளர் பார்த்திபராஜா, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா உள்ளிட்டோர் பேசவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில், எழுத்தாளர் நா. முத்துநிலவன், அறிவியல் இயக்க நிர்வாகிகள் அ. மணவாளன், எஸ்.சி. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட வரவேற்புக் குழுவினர் செய்து வருகின்றனர். 
புத்தகத் திருவிழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக்கிடையே கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. சிறந்த திரைப்படங்கள், குறும்படங்களுக்கான விருதுகளும் விழாவில் வழங்கப்படவுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களை புத்தகத் திருவிழாவில் பங்கேற்கச் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த படைப்பாளர்கள், வாசகர்களையும் பங்கேற்கச் செய்யவும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தங்கம் முர்த்தி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com