சாதனை படைக்கும்புதுக்கோட்டை...

தமிழர் பண்பாட்டு அடையாளமாகக் கருதப்பட்ட ஜல்லிக்கட்டு, உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பிறகு மாநிலமெங்கு

தமிழர் பண்பாட்டு அடையாளமாகக் கருதப்பட்ட ஜல்லிக்கட்டு, உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பிறகு மாநிலமெங்கும் ஏற்பட்ட எழுச்சிப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட்டது ஒரு முக்கியமான வரலாறென்றால், அதன் தொடர்ச்சியாக தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்த்தப்படும் சாதனையும் அடுத்த வரலாற்றை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழந்தமிழர் இலக்கியங்களில் ஏறுதழுவுதல் என்ற பெயரில் காளைகளை அடக்கும் செய்திகளும், கல்வெட்டுகளில் காட்சிகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஏறு என்றால் காளை, தழுவுதல் என்றால் அடக்குதல் என்பது பொருள்.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நாணயங்களான சல்லிக்காசுகள் மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும். மாட்டினை அடக்கி அந்தச் சல்லிக்காசுகளை எடுத்துக் கொள்வது போட்டியாகும்.சல்லிக்கட்டுதான் பிற்காலத்தில் ஜல்லிக்கட்டாக மறுவியிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
இந்த நிலையில், ஏறத்தாழ 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தலாமா நடத்தக் கூடாதா என்ற விவாதம் தொடங்கி நீதிமன்றங்களுக்கும் சென்றது. 
இதன் ஒரு முக்கிய கட்டமாக, 2011 ஆம் ஆண்டில், பீட்டா அமைப்பு காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், காட்சிப்படுத்துதல் பட்டியலில் காளை இடம்பெற்றுள்ளதால் ஜல்லிக்கட்டினை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கின் இறுதித் தீர்ப்பு 2014 மே 7-இல் வெளியானது.
தீர்ப்பில் ஜல்லிக்கட்டு விழாவுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. இதனால், 2015 மற்றும்2016ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் எங்கும் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. 
ஆனால், தமிழ் மண்ணின் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய காட்சியாக, 2017 ஜனவரியில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் அலங்காநல்லூரிலும், அதற்கு ஆதரவாக மெரினாவிலும், இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் அந்தப் புரட்சி நிகழ்ந்தது. 
காட்சிப்படுத்துதல் பட்டியலில் இருந்து காளையை நீக்க மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. ஜல்லிக்கட்டை நடத்த அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவற்றின் தொடர்ச்சியாக காளைகள் காட்சிப்படுத்துதல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அதன்பிறகு, அதே மாதத்தில் ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்தப்பட்டன. பல்வேறு விதிமுறைகள் அமலாக்கப்பட்டன. ஒவ்வொரு ஜல்லிக்கட்டுக்கும்
பிரத்யேக அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. காளைகளும், மாடு பிடி வீரர்களும் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டனர். அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதுமை படைக்கும் புதுக்கோட்டை: 
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது.இதுபோல, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. 
என்றபோதும் புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டுக்கு மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 518 வாடிவாசல்கள் உள்ளதும் ஆச்சர்யம்தான்.
இந்த மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஒரே நாளில் இரு இடங்களிலும் நடைபெறுகின்றன.
ஜனவரி, பிப்ரவரி மட்டுமல்லாமல், புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு விழாக்கள் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் வரை (கிராமங்களில் நடைபெறும் வைகாசித் திருவிழாவுடன் இணைந்து) ஜல்லிக்கட்டு நடைபெறுகின்றன. 
இப்போது விராலிமலையில், உலக சாதனைக்கான பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது. காளைகளின் எண்ணிக்கையிலும், பரிசுகளின் எண்ணிக்கையிலும், மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கையில் இந்த விழா அடுத்த கட்ட வரலாற்றைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com