நிவாரணம் கோரி 5 இடங்களில் மனு கொடுக்கும் போராட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரியும்,  மத்திய, மாநில அரசின் அலட்சியப்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரியும்,  மத்திய, மாநில அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 அரசு அலுவலகங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் அனைத்து துறை அலுவலர்களும் நேரில் சென்று பாதிப்புகளை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட தென்னை மரத்துக்கு ரூ. 20,000 வழங்க வேண்டும். 
முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 50,000, பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 25,000, நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 25,000, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும். தேக்கு, சவுக்கு, சோளம், மா, புளி, தைலம் போன்ற அனைத்து மரங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 
கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், நுண் நிதி நிறுவனங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். புயலால் இறந்த மாடு ஒன்றுக்கு ரூ. 50,000, கன்றுக்கு ரூ. 25,000, ஆடு ஒன்றுக்கு ரூ. 8,000, கோழி உள்ளிட்ட அனைத்து வளர்ப்பு உயிரினங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ரூ. 15 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். புயல் பாதித்த மாவட்டங்களில் குடிசையில் இருக்கும் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி இந்த மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 
தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு விவசாய சங்க ஒன்றியச் செயலர் கே. செளந்தர்ராஜன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் ஒன்றியச் செயலர் எம். மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பூதலூர்: பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வெ. ஜீவகுமார் தலைமை வகித்தார். பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலர் சி. பாஸ்கர், வடக்கு ஒன்றியச் செயலர் கே. காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்: கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் சி. நாகராஜன் தலைமை வகித்தனர். 
பாபநாசம்: பாபநாசம் வட்டா ட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலர் பி.எம். காதர் உசேன், தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் வி. உமாபதி தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
அம்மாபேட்டை: அம்மாபேட் டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர். வாசு, விவசாய சங்க ஒன்றியச் செயலர் கே. முனியாண்டி தலைமை வகித்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com